Home One Line P1 சொஸ்மா சட்டத்தில் தடுத்து வைத்திருப்போரை உடனடியாக விடுதலை செய்வீர் – இராமகிருஷ்ணன் வலியுறுத்து

சொஸ்மா சட்டத்தில் தடுத்து வைத்திருப்போரை உடனடியாக விடுதலை செய்வீர் – இராமகிருஷ்ணன் வலியுறுத்து

995
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – “ஆதாரம் இல்லாமல் ஒருவரை நீண்ட காலம் தடுத்து வைப்பது நியாயமா? ஆதாரமில்லாமல் கைது செய்து, நீதிமன்றத்தின் நிறுத்தாமல், இப்போதுதான் ஆதாரத்தைத் தேடும் போலீசாரின் செயல் மனிதாபிமான செயல்தானா?” என அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுப்பியுள்ளார் ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான டாக்டர் சு.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஒருவரைக் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரத்தோடு கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதன் மூலமே குற்றவாளிக்கு நியாயம் வழங்க முடியும் என்ற நியதி இருக்கும் போது, குடும்பத்திலிருந்து ஒருவரைப் பிரித்து, மனித உரிமை மீறலைச் செய்வதில் நியாயம் இருக்க முடியுமா?” என்றும் கேள்வி தொடுத்துள்ள இராமகிருஷ்ணன், “2009-ஆம் ஆண்டு பூண்டோடு ஒழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளோடு தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி, 12 பேரைக் கைது செய்து, நீண்டகாலம் தடுத்து வைத்திருப்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும். அவர்களைக் கொடுங்கோன்மையான சொஸ்மா சட்டத்தின் மூலம் தடுத்து வைத்திருப்பது அனைத்துலக நீதி முறைமையைக் கேலிக் கூத்தாக்கி இருக்கிறது” என்றும் சாடினார்.

“சொஸ்மா பயங்கரவாத சட்டமானது நீதி விசாரணை நடைமுறையையும் ஆதாரச் சட்டத்தையும் புறக்கணித்துள்ளது. இச்சட்டம் எப்போதும், சந்தேகப்படும் நபருக்கு மனித உரிமையைத் தராமல், குற்றம் சாட்டுவோருக்கு வானளாவிய அதிகாரத்தைத் தந்து நீதியை நசுக்கும் அதிகாரத்தை அளித்துள்ளதே உண்மையாகும். நீதிமன்ற விசாரணையில் குற்றம் சாட்டப்படுவோர், தாங்கள் மற்றவர்களிடம் கேட்டதை வைத்தே சாட்சியம் அளிக்கும்போது, அவரின் குற்றமற்றத் தன்மையை எப்படி புரிந்து கொள்ள முடியும். சட்டம் மனிதர்களின் வாழ்வோடு விளையாடக்கூடாது. மனிதர்களின் வாழ்வை பந்து விளையாடுவது போல சொஸ்மா சட்டம் விளையாடக் கூடாது என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்றும் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினருமான இராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட பத்திரிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

விடுதலைப் புலிகளோடு தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லி கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அப்பாவிகள் என்றும் வலியுறுத்திய இராமகிருஷ்ணன், “அவர்கள் கிரிமினல்கள் அல்லர். விடுதலைப்புலிகள் தங்களின் சமூகத்துக்காகப் போரிட்டவர்கள். கொடுங்கோன்மைமிக்க அரசை எதிர்த்துப் போரிட்டவர்கள். தங்களின் உரிமைக்காகப் போராட்டம் நடத்தியவர்கள். அவர்களுக்கான சகல உரிமையும் மறுக்கப்பட்டதால்தான் அவர்கள் அவ்வாறு செய்ய நேர்ந்தது. தங்களின் உரிமைக்காகப் போராடிய அவர்கள் மற்ற நாட்டுடன் போரிடவில்லை” என்றும் தனதறிக்கையில் விளக்கினார்.

“மலேசியா அவர்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் குற்றம் சாட்டுவதில் எந்தவொரு நியாயமும் இல்லை. அவர்கள் மலேசியாவின் மீது போர் தொடுத்தார்களா? எம்மாதிரியான பாதகத்தை மேற்கொண்டனர் என்ற ஆதாரமும் உண்டா? அவர்கள் மலேசியாவை குறிவைத்து தாக்குதலை மேற்கொள்ளத் திட்டமிடுவதாக கூறப்படும் ஏதேனும் ஆதாரத்தைப் போலீசாரால் காட்ட முடியுமா? இத்தனை நாளாகியும் போலீசார் எந்த ஆதாரத்தைத் தாக்கல் செய்துள்ளனர்? அண்மையில் சொஸ்மா சட்டத்தில் கைது செய்யப்பட்ட எம்.பூமுகனின் தங்கையிடம் போலீசார் விசாரணை செய்தது ஏன்? ஆதாரம் இல்லாமல் கைது செய்தவரை நீதிமன்றத்தில் நிறுத்த இப்போதுதான் போலீசார் ஆதாரத்தைத் தேடுவது கேலிக் கூத்தாகும்” என்றும் இராமகிருஷ்ணன் கடுமையாகச் சாடினார்.

“சட்டம் என்பது நியாயத்தை நிலைநாட்டவே ஆகும். ஆனால், ஆதாரம் இல்லாமல் 12 பேரைத் தடுத்து வைத்து, தங்களைத் தற்காத்துக் கொள்ள எந்த உரிமையையும் தராமல் நாளைக் கடத்துவது என்ன நியாயம்? இதுதான் நீதியை நிலைநாட்டும் செயலா? தடுத்து வைக்கப்பட்டவர்களில் காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் மற்றும் சிரம்பான் ஜெயா, சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோரும் அடங்குவர். அவர்களைத் தடுத்து வைத்திருப்பது பெரும் அதிருப்தியை அளிக்கிறது. ஆட்சிக்கு வந்தால் சொஸ்மா சட்டத்தை இரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து, அதனை உதாசீனம் செய்யும் பக்காத்தான் அரசின் மீது மக்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். தவறினால் அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் தப்பிப் பிழைப்பது முடியாத காரியமாகும்” என்றும் இராமகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

“நாம் சர்வாதிகார ஆட்சியில் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களின் ஆதரவு நம்மோடு இருக்கும். சோஸ்மா சட்டமானது மனித உரிமை மீறலாகும். அதன் மூலம் மனித சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அது எப்போதும் அமலாக்கத்துறைக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. எனவே, அராஜக சட்டமான சொஸ்மாவை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். தடுத்து வைக்கப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென இராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.