கோலாலம்பூர்: பாஸ் கட்சிக்கு எப்படி முஸ்லிம் அல்லாத ஆதரவாளர்கள் குழு உள்ளதோ (பாஸ் ஆதரவாளர்கள் குழு- டிஎச்பிபி), அது போல மசீசவும் சீனர்கள் அல்லாத பிற இனத்தவருக்கும் அதன் அங்கத்துவத்தை திறக்கலாம் என்று மசீச பொதுச் செயலாளர் சோங் சின் வுன் கூறினார்.
இந்த திட்டம் மசீச அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட மூன்று திருத்தங்களில் ஒன்றாகும் என்றும், இது வருகிற ஞாயிற்றுக்கிழமை 66-வது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.
“பாஸ் கட்சியைப் போல மசீசவும் மற்ற இனங்களின் ஆதரவாளர்களைக் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் எங்கள் வாக்காளர்கள் பன்முக இனத்தவர்கள்.”
“நாங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றினோம். நாங்கள் இன்னும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம், ஆனால் எங்கள் ஆதரவாளர்களுக்கு ஒரு தளத்தை வைத்திருக்க உதவுவதற்காக நாங்கள் இந்த திட்டத்தை திறக்கிறோம்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இந்தத் திருத்தமானது சீன வாக்காளர்களின் ஆதரவை மசீச நம்பாததால் அல்ல, மாறாக, சீனரல்லாத சமூகத்திற்கு கட்சியின் போராட்டத்தை ஆதரிப்பதற்கும், ஒரே இனத்தின் அரசியலை நிலைநிறுத்துவதற்கான ஒரு தளமாக மட்டுமே இருந்திடக்கூடாது என்ற காரணத்தினாலே என்று அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள், சபாவில் கடாசன் மற்றும் பெர்லிஸில் மற்றும் கெடாவில் சியாம் இனத்தவர்களிடமிருந்து மசீசவில் உறுப்பினர்களாக விண்ணப்பங்களைப் பெற்றதாக சோங் கூறினார்.
சாதாரண உறுப்பினர்களைப் போலல்லாமல், நட்பு ஆதரவாளர்கள் கட்சி பதவிகளுக்கு போட்டியிட அதிகாரம் இல்லை, ஆனால் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை சோங் நிராகரிக்கவில்லை.
உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்தால், மசீச ஒரு குழு அல்லது கழகத்தை உருவாக்கக்கூடும் என்றும், அதன் துணை நிறுவனங்கள் வருடாந்திர பொதுக் கூட்டங்கள் அல்லது உயர் தலைவர்களுடன் உரையாடல்களில் கலந்து கொள்ள அழைக்கப்படும் என்றும் கூறினார்.