கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணியைப் பற்றி உறுதியாக தெரியாவிட்டால், வரும் பொதுத் தேர்தலில் மக்கள் அதன் தலைவிதியை தீர்மானிக்க முடியும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
தங்களின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நம்பிக்கைக் கூட்டணிக்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்படுவதாக டாக்டர் மகாதீர் மேலும் கூறினார்.
எமீர் ரிசர்ச்சின் (Emir Research) ஆய்வுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். மக்களின் அச்சம் “அதிகபட்ச” மட்டத்தில் இருப்பதையும், அவர்களுக்கு நம்பிக்கைக் கூட்டணி மீது நம்பிக்கை இல்லை என்பதையும் காட்டுவதாக அது குறிப்பிட்டிருந்தது.
“அவர்களுக்கு (மக்கள்) உறுதியாக தெரியவில்லை என்றால், அவர்கள் 15-வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியும். நம்பிக்கைக் கூட்டணியின் தலைவிதியை தீர்மானிக்க முடியும்.”
“ஆனால் நாங்கள் நிறைய வாக்குறுதிகளை அளித்துள்ளோம். அவற்றை நிறைவேற்ற ஐந்து வருடங்கள் ஆகும்.”
“நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளை தயாரித்தபோது எங்களுக்கு முழு தகவலும் கிடைக்கவில்லை. நாங்கள் பொறுப்பேற்றபோது, பழைய அரசாங்கத்தால் ஏற்பட்ட சேதம் நாங்கள் நினைத்ததை விட மிகவும் தீவிரமானது என்பதைக் கண்டோம்.”
“எனவே எங்கள் இலக்குகளை அடைவது எங்களுக்கு கடினம்,” என்று அவர் கூறினார்.