கோலாலம்பூர்: மங்கோலியப் பெண்மணியான அல்தான்துன்யா ஷாரிபுவைக் கொலை செய்த குற்றவாளி அசிலா ஹாட்ரி, காஜாங் சிறையில் இருந்து அதிர்ச்சியூட்டும் கூற்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் (அந்நேரத்தில் துணைப் பிரதமர்) மற்றும் அவரது நெருங்கிய நண்பர் அப்துல் ரசாக் பாகிண்டா ஆகியோரிடமிருந்து அல்தான்துன்யாவைத் கொல்லச் சொல்லி உத்தரவு வந்ததாக மரண தண்டனைக்குக் காத்திருக்கும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது முதல் ஒப்புதல் வாக்குமூலத்தில், காவல் துறையின் சிறப்புப் படைப் பிரிவு அதிகாரியான அவர் கூறுகையில், அவரும், காவல்துறை அதிகாரி சிறுல் அசார் உமாரும் கொலை செய்வதற்கான வழிமுறைகளை மட்டுமே பின்பற்றியதாகக் கூறினார்.
தமது குற்றவாளி தீர்ப்பு மற்றும் தண்டனையை மறுஆய்வு செய்யக் கூட்டரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தில், அசிலா இந்த விவரங்களை சேர்த்துள்ளார்.
நீதியை நிலைநாட்ட, இரகசிய நடவடிக்கையின் முழு ஆதாரங்களையும் திறந்த நீதிமன்றத்தில் முன்வைக்க மீண்டும் விசாரணைக்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
வழக்கு நாளை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணையின் போது எந்த ஆதாரமும் இல்லை என்று அசிலா கூறியிருந்தார்.
தனது விண்ணப்பத்திற்கு ஆதரவாக ஒரு சட்டப்பூர்வ அறிவிப்பில், நஜீப் தன்னை “கைது செய்து அகற்ற” உத்தரவிட்டதாக அசிலா கூறினார். அவர் வெளிநாட்டு உளவாளி என்றும் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்றும் நஜிப் விவரித்ததாக அவர் குறிப்பிட்டார்.
“வெளிநாட்டு உளவாளியைப் பிடித்து அகற்றுவது என்றால் என்ன என்று நான் நஜிப்பிடம் கேட்டேன், கழுத்தை வெட்டுவது போல சுட்டிக்காட்டி, கொல் என்று நஜிப் பதிலளித்தார்,” என்று அசிலா மேற்கோள் காட்டினார்.
“வெளிநாட்டு உளவாளியின் உடலை அழிப்பதைக் குறித்து கேட்டபோது, வெளிநாட்டு உளவாளியின் சடலத்தை எந்தவொரு தடயமும் இல்லாமல் அப்புறப்படுத்த நஜிப் உத்தரவிட்டார்.”
“வெளிநாட்டு உளவாளியைப் பற்றி கவனமாக இருங்கள், ஏனெனில் அவர் பேசுவதிலும் ஏமாற்றுவதிலும் வல்லவர்.” என்று நஜீப் சொன்னதாகவும் அசிலா கூறினார்.
இந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய ஏன் இப்போதுதான் அவர் விண்ணப்பித்தார் என்பதையும் அசிலா விளக்கினார்.
தனது வாக்குமூலத்தில், 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சட்டப்பூர்வ அறிவிப்பை உருவாக்கத் திட்டமிட்டிருந்தேன், ஆனால் 14-வது பொதுத் தேர்தலில் அது தவறாக அணுகப்படும் என்று அஞ்சியதால் அதனை ஒத்திவைத்ததாகக் கூறினார்.
“மேற்கூறிய உண்மைகளை சமர்ப்பிப்பதில் எனது நோக்கமானது, நான் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களால் துன்புறுத்தப்பட்டக் காரணத்தால் மட்டுமல்ல, அல்தான்துன்யா ஷாரிபூ கொலை வழக்கின் உண்மைகளை வெளியிடவும்தான் என்பதை இதன்மூலம் குறிப்பிடுகிறேன்.” அவர் கூறினார்.