கோலாலம்பூர்: ஊடக நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். ஆனால், அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதைத் தவிர்ப்பதற்கு சாத்தியமான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரேஸின் (என்எஸ்டிபி) 543 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட இருப்பது தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு இவ்வாறு தெரிவித்தார்.
“நாங்கள் தலையிடவில்லை, ஆனால் நான் கடந்த வாரம் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்தின் முதலாளியுடன் ஒரு சந்திப்பை நடத்தினேன். மேலும், அவர்கள் அடிப்படையில் சில வரி நடவடிக்கைகள் மற்றும் சில வரி விலக்குகளைப் பற்றி கேள்வி எழுப்பினர்.”
“நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம் என்றாலும், நாங்கள் திறந்த மனதுடையவர்கள். நாங்கள் வரி விலக்குகளை வழங்கினால், ஊடக ஊழியர்களை பணிநீக்கம் செய்யாதபடி அவர்கள் ஒவ்வொரு நடவடிக்கையும் எடுப்பார்கள் என்று அவர்கள் உறுதியளிக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன்.” என்று அவர் தெரிவித்தார்.
“வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், நாங்கள் உண்மைகளின் அடிப்படையில் வாதிட விரும்புகிறோம். வாருங்கள் வாதிடுவோம். யாரும் வேலை இழப்பதை நாங்கள் காண விரும்பவில்லை” என்று கோலாலம்பூரில் இன்று திங்கட்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் லிம் கூறினார்.