சூரிக்கு: 2020-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில், மலேசியாவின் தரவரிசை கடந்த ஆண்டை விட மூன்று படிகள் சரிந்துள்ளது.
உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள இந்த குறியீட்டில் மலேசியா தற்போது 153 நாடுகளில் 104-வது இடத்தில் உள்ளது. இதனால், மலேசியா நேபாளம் (101), செனகல் (99), லெசோதோ (88) மற்றும் உகாண்டா ( 65) நாடுகளைக் காட்டிலும் கீழே இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக, மலேசியாவில் பாலின இடைவெளி சராசரியாக உலக பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கு சமமாக உள்ளது. இருப்பினும், நாடு அரசியலில் உலக சராசரியை விட மிகவும் பின்தங்கியிருக்கிறது.
அரசியல் ரீதியாக 153 நாடுகளில் மலேசியா 117 இடத்தில் 0.108 மதிப்பெண்களுடன் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில், தொடர்ச்சியாக 11-வது உலகளாவிய பாலின குறியீட்டுக்கான பட்டியலில் ஐஸ்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நோர்வே, மூன்றாவது இடத்தில் பின்லாந்து, நான்காவது இடத்தில் ஸ்வீடன் உள்ளன. இதனிடையே இந்தோனிசியா 85-வது இடத்தில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலின இடைவெளியின் ஒட்டுமொத்த செயல்திறன் நான்கு பரிமாண செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. பொருளாதார பங்கேற்பு, கல்வி சாதனை, சுகாதாரம் மற்றும் வாழ்க்கை முறை, மற்றும் அரசியல் அதிகாரம் அவற்றில் அடங்குகிறது.