கோலாலம்பூர்: மின்னியல் பணபரிமாற்ற முன்முயற்சியை செயல்படுத்துவதற்கான இறுதி ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஜனவரியில் தொடங்கப்படும் என்றும் நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
பயனீட்டாளர்கள் மற்றும் உள்ளூர் வணிகர்கள், குறிப்பாக சிறு வணிகங்கள் மற்றும் சில்லறை வணிகங்களிடையே, மின்னியல் பணபரிமாற்றங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக 2020-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 450 மில்லியன் ரிங்கிட், மின்னியல் தூண்டுதல் நிதித் திட்டம் அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
தேசிய பதிவுத் துறை (என்ஆர்டி) மற்றும் உள்நாட்டு வருவாய் வாரியம் (ஐஆர்பி) உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுவதால், மின்னியல் பணபரிமாற்ற முன்முயற்சியை செயல்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் அமைச்சகம் கசானா நேஷனல் பெர்ஹாட்டை நியமித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மின்னியல் பணபரிமாற்ற முன்முயற்சியின் மூலம், 18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய மலேசியர்கள் அல்லது ஆண்டுதோறும் 100,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக சம்பாதிப்பவருக்கு மின்னியல் பணப்பை (e-wallet) சேவை அமைப்புகள் மூலம், கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு செலவழிக்க தலா 30 ரிங்கிட் தரப்படும் என்று லிம் கூறினார்.
“கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மின்-பணப்பை சேவை அமைப்புகள் இந்த முயற்சியின் இரண்டு மாத காலப்பகுதியில் பயன்பாட்டை ஊக்குவிக்க கூடுதல் சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள் பற்றிய கூடுதல் தகவல்கள் கசானா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மின்– பணப்பை சேவை அமைப்புகளால் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.