கோலாலம்பூர்: அரசாங்கம் நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதிய விகிதமான 1,200 ரிங்கிட்டை நாடு முழுவதிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பிஎஸ்எம் கட்சித் தெரிவித்துள்ளது.
இந்த சம்பள உயர்வானது வெறும் 57 முக்கிய நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் நேற்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இம்மாதிரியான நடவடிக்கைகள், அதிக வருமானம் பெறுபவர்களுக்கும் குறைவான வருமானம் பெறுபவர்களுக்கும் ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.
“குறைந்தபட்ச ஊதியத்தை 1,200 ரிங்கிட்டுக்கு உயர்த்துவதே குறைவாக செயல்படுத்தப்பட உள்ளது, ஆனால், அதையும் 57 நகரங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்துவது தற்போதைய நிலைமைக்கு உதவாது.”
“மலேசியாவின் வறுமை விகிதம் குறித்து ஐநா பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டனின் சிறப்பு அறிக்கையை மறுக்க முடியாது” என்று அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமை, 57 நகர மற்றும் நகராட்சி மன்றங்களில் குறைந்தபட்ச ஊதியத்தை 1,200 ரிங்கிட்டுக்கு உயர்த்துவதாகவும், நாட்டின் பிற பகுதிகளில் 1,100 ரிங்கிட்டுக்கு உயர்த்துவதாகவும் அரசாங்கம் அறிவித்தது.
குறைந்தபட்ச ஊதிய உயர்வு, தொழிலாளர்கள் நகரத்தின் வாழ்க்கைச் செலவை சமாளிக்க உதவும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்புதிய கொள்கையானது வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இது உள்நாட்டு சேவையில் பணிபுரிபவர்களைத் தவிர அனைத்து தனியார் துறைகளையும் உள்ளடக்கியது என்றும் அது குறிப்பிட்டிருந்தது.
நாடு முழுவதும் 1,200 ரிங்கிட் சம்பள வீதத்தை நிர்ணயிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அருட்செல்வன் கூறினார்.
“இது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யாது, மேலும், புதிய சட்டத்தின் நிர்வாகம் மற்றும் செயல்படுத்தலில் பதட்டங்களைக் குறைக்கும்.” என்றும் அவர் கூறினார்.