Home One Line P1 “பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு முன்னர், மலேசியாவை சீர் செய்யுங்கள்”– விக்னேஸ்வரன்

“பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு முன்னர், மலேசியாவை சீர் செய்யுங்கள்”– விக்னேஸ்வரன்

1549
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு முன்னர், மலேசியாவில் சமநீதியும் சமத்துவமும் அமைவதை உறுதி செய்யுமாறு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹஜி ஹாடி அவாங் இருவரையும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அறிவுறுத்தினார்.

“துன் மகாதீரும் ஹாடி அவாங்கும் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைத்து கருத்து கூறுவதற்கு முன்னர், நமது சொந்த நாட்டில் நிலவும் குறைபாடுகளைக் களைந்து, நிவர்த்தி செய்ய முற்பட வேண்டும். அதை விடுத்து, பிற நாடுகளின் குடியுரிமை சட்டத் திருத்தங்களின் பின்புலத்தினை ஆராயாமல், உணர்ச்சிவசப்பட்டு  விமர்சிப்பதும், கண்டிப்பதும் விவேகமல்ல,” என நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரன் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

“அனைத்துலக மரபின்படியும் ஐக்கிய நாடுகளின் கொள்கையின்படியும், சுயாட்சிப் பெற்ற எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு பிற நாடுகளுக்கு உரிமையில்லை. இதனை அறியாதவரா நமது பிரதமர்? எதன் அடிப்படையில் அவர் இந்திய நாட்டின் குடியுரிமை சட்டவிதித் திருத்தங்களைப் பற்றி விமர்சனம் செய்கிறார்? இம்மாதிரியான விமர்சனங்களும், கண்டிப்புகளும் மலேசியாவின் மீது மீண்டும் பாய ஒரு கணம் போதும்! மலேசியாவில் ஜனநாயகமும், சுதந்திரமும் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளதாக பிற நாடுகள் கருதினால், அவை நம் நாட்டில் தலையிட உரிமையுள்ளதா? அம்மாதிரியான உரிமை இருக்குமேயானால், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலேசியா மீது விமர்சனங்கள் தொடுக்கத் தயங்க மாட்டார் என்பது திண்ணம்.  பல்வேறு குற்றங்களுக்காக இந்தியா தேடும் மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு அடைக்கலமும், நிரந்தர குடியுரிமையும் வழங்கிய நாடல்லவா நமது மலேசியா!” என விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“மலேசிய மக்கள் பூமிபுத்ரா மற்றும் பூமிபுத்ரா அல்லாதோர் என பிரிக்கப்பட்டு, பூமிபுத்ரா சமூகத்தினருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதை நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்கின்றது. பூமிபுத்ராக்களுக்கான இச்சிறப்பு சலுகைகள் பிற இனத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், சமத்துவ அடிப்படையில் இதுவும் ஒருவகை பாகுப்பாடுதானே! சொந்த நாட்டிலேயே மக்களுக்கிடையே பாகுபாடு நிலவுகையில், பிற நாட்டின் கொள்கைகளில் மூக்கை நுழைப்பது எவ்விதத்தில் நியாயம்? சமஸ்கிருதம் ஒரு மொழியேயானாலும், அதனை இந்து அல்லாதோரிடம் திணிப்பதற்கு இந்திய அரசு எத்தனித்ததில்லை. மாறாக, மலேசியாவிலோ தற்போது ஜாவி இஸ்லாமிய எழுத்துக்கலை அனைத்து பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யப்படுகின்றது. தமிழ், சீனப்பள்ளிகளிலேயே அரசு முழு உதவி, பகுதி உதவி பெறும் பள்ளிகள் என வேறுபாடுகள் நிலவும் வேளையில், இதுப்போன்ற ஐயங்களை ஏற்படுத்தும் கல்விக் கொள்கைகளும் திட்டங்களும் பல்லின மக்களிடையே பிளவுகளையே ஏற்படுத்துகின்றது என்பது வெள்ளிடைமலை. அதுகுறித்து மாற்றுக்குரல் எழுப்புவதற்கும் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. சொந்த நாட்டிலேயே கருத்துரிமை முடக்கப்படுகின்றது. நிலைமை இவ்வாறு இருக்கையில், இந்தியாவின் குடியுரிமை சட்டத்திருத்தம்  முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கின்றது என நம் நாட்டுத் தலைவர்கள் சமய அடிப்படையில் கண்டிக்கின்றனர். உண்மையிலேயே துன் மகாதீரோ, ஹாடி அவாங்கோ இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தினை ஆராய்ந்தார்களா? அதில் எந்தப்பகுதியாவது அனைத்துலக சட்டங்களை மீறுகின்றதா?  தீர ஆராயாமல், சட்டவிதி மாற்றங்களின் சாராம்சங்களை அறியாமல் அரைகுறை விமர்சனங்களை முன்வைப்பது தலைவர்களுக்கு உகந்ததல்ல!” என தமதறிக்கையில் விக்னேஸ்வரன் மேலும் விவரித்தார்.

“பல்லின மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் நாடு மலேசியா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வப்போது பிரச்சினைகளும், பிணக்குகளும் எட்டிப்பார்த்தாலும், அவற்றை உடனே சுமுகமாகக் களைந்து, மறந்து ஒற்றுமையுடன் திகழ்கிறோம். ஆனால் அதுவே நாம் பிற நாடுகளை குறை கூறி, விமர்சிப்பதற்கான உரிமமாக அமையாது. மலேசிய மக்களிடையே நிலவும் பாராப்பட்சங்களை முதலில் களையுங்கள். நாடு சரியான பாதையில் செல்கின்றதா?  நாட்டின் தலைமைத்துவம் சீராக உள்ளதா? அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படுகின்றதா? இவற்றை முதலில் ஆராயுங்கள், சரி செய்யுங்கள். அதை விடுத்து பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு அனத்துலக நாடுகளின் வெறுப்பினை சம்பாதிக்காதீர்!” என விக்னேஸ்வரன் அறிவுறுத்தினார்.