Home One Line P1 அரசியல் பார்வை 2020 : மலேசியாவை அதிர வைக்கப் போகும் 13 அரசியல் – நீதித்...

அரசியல் பார்வை 2020 : மலேசியாவை அதிர வைக்கப் போகும் 13 அரசியல் – நீதித் துறை முடிவுகள்

877
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (2020-ஆம் ஆண்டில் மலேசியாவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய – நமது நாட்டின் எதிர்கால அரசியல் பயணத்தை திசை மாற்றக்கூடிய – 10 அரசியல் மற்றும் நீதித் துறை முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

#1 – கிமானிஸ் (சபா) நாடாளுமன்ற இடைத் தேர்தல்

எதிர்வரும் ஜனவரி 4-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என்றும் ஜனவரி 18-ஆம் தேதி வாக்களிப்பு என்றும் அறிவிக்கப்பட்டிருக்கும் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தல் சபா அரசியல் வானிலையில் ஒரு மாற்றத்தையும் அதன் வழி மலேசியா முழுமையிலும் அரசியல் சிந்தனைகளையும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபா மாநிலத்தில் பார்ட்டி வாரிசான் சபா கட்சியின் தலைமையில் வலுவாகக் காலூன்றியுள்ள நம்பிக்கைக் கூட்டணி அம்னோவிடம் இருந்து கைப்பற்ற முடியுமா என்பதுதான் கேள்வி. 2018-இல் அம்னோ கைப்பற்றிய அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனிபா அமானின் (படம்) தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டதால் நடைபெறும் இடைத் தேர்தலில் மீண்டும் அம்னோ போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மேற்கு மலேசியாவில் வரிசையாக இடைத் தேர்தல் வெற்றிகளைப் பதிவு செய்து வந்துள்ள அம்னோ கிமானிஸ் தொகுதியிலும் வெற்றி பெற்றால் அதன் மூலம் சபாவில் அந்தக் கட்சி தனது ஆதரவுக் களத்தை விரிவாக்க முடியும். அந்த வெற்றியால் வலிமை பெற்று அதன் பழைய அரசியல் பங்காளிகள்  மீண்டும் அந்தக் கட்சியுடன் கைகோர்க்க முடியும்.

சபா மாநிலம் குறித்த நம்பிக்கைக் கூட்டணியின் திட்டங்களும் கிமானிஸ் இடைத் தேர்தல் முடிவுகளால் மாற்றம் அடையலாம்.

# 2 – துன் மகாதீரின் பதவி விலகல்

இந்த வருடம் மலேசியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் முடிவு என்பது மகாதீர் எப்போது தனது பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பார் என்பதுதான்!

அதனைத் தொடர்ந்து அன்வார் இப்ராகிம் பிரதமராக முடியுமா? எதிர்க்கட்சிகள் அன்வாரைத் தடுப்பதற்கு நாடாளுமன்ற வாக்கெடுப்பின் வழி முயற்சிகள் செய்யுமா? என்பது போன்ற பல துணைக் கேள்விகளை உள்ளடக்கியுள்ளது மகாதீர் எடுக்கப்போகும் பதவி விலகல் முடிவு.

மகாதீர் 2020-ஆம் ஆண்டைத் தாண்டியும் தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் எனப் பிடிவாதமாக இருந்தால், அதன் காரணமாகவும் சில அரசியல் மாற்றங்கள் ஏற்படும்.

# 3 – 2020-இல் அமைச்சரவை மாற்றங்கள் நிகழுமா?

மகாதீர் அறிவித்த அமைச்சரவை மாற்றம் இதுவரையில் செயல்படுத்தப்படவில்லை. அன்வார் பிரதமர் ஆனதும் மேலும் ஓர் அமைச்சரவை மாற்றம் சாத்தியம் என்பதால் ஒரேயடியாக, அன்வார் பிரதமரானதும் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்ற ஊகமும் நிலவுகிறது.

மகாதீரோ, அன்வாரோ யார் அமைச்சரவை மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அதன் காரணமாக பல அரசியல் மாற்றங்கள் ஏற்படும்.

காரணம், லிம் குவான் எங் தொடர்ந்து நிதி அமைச்சராக நீடிப்பாரா? அன்வாருக்கு எதிராக செயல்படும் அஸ்மின் அலி, சுரைடா கமாருடின் போன்ற அமைச்சர்களை மீண்டும் பிகேஆர் தலைமைத்துவம் அமைச்சர்களாகத் தொடர பரிந்துரைக்குமா? கட்சி சார்பு இல்லாத பொன்.வேதமூர்த்தியின் அமைச்சுப் பதவி நீடிக்குமா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை தந்து – அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் சம்பவமாக அமைச்சரவை மாற்றங்கள் முடிவு திகழும்.

# 4 – நஜிப் மீதான வழக்கு முடிவுகள்

நஜிப் குற்றவாளி என ஏதாவது ஒரு வழக்கில் இந்த ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டால், அதன் மூலம் பல அரசியல் மாற்றங்கள் ஏற்படும். அவரது பெக்கான் தொகுதி இடைத் தேர்தலைச் சந்திக்கும். அவரது மகன் அங்கு அம்னோவின் சார்பில் போட்டியிடலாம்.

நஜிப் சிறைக்கு செல்வாரா? அல்லது மாமன்னருக்கு கருணை மனு செய்து அதன் மூலம் விடுதலை பெற முடியுமா? நஜிப் சிறை செல்வதால் அம்னோவில் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு நஜிப் மீதான வழக்கு முடிவுகள் விடைகளை வழங்கும்.

# 5 – சாஹிட் ஹமிடி மீதான வழக்கு முடிவு

அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி மீது தொடுக்கப்பட்டிருக்கும் ஊழல் வழக்கு மிகத் தெளிவாக அவருக்கு எதிராக இருப்பதால் அவருக்குத் தண்டனை வழங்கப்படும் சாத்தியம் அதிகம் இருக்கிறது. அதன் மூலம் அவர் அம்னோ தலைவர் பதவியை இழப்பார்.

இதுவரையில் நஜிப்புக்கு தோள் கொடுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவருக்குப் பதிலாக நடப்பு துணைத் தலைவர் முகமட் ஹசான் தலைவராகப் பொறுப்பேற்பார். அவரும் இதுபோன்றே நஜிப்புக்கு ஆதரவாகச் செயல்படுவாரா என்பது சந்தேகமே!

அவரது அணுகுமுறை, வகுக்கப் போகும் வியூகங்கள், தலைமைத்துவ ஆற்றல், பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பைத் தொடர்வாரா என்பது போன்ற பல அம்சங்கள் நாட்டின் அரசியல் பாதையைத் திசை திருப்பக் கூடும்.

# 6 – அஸ்மின் அலி மீதான காணொளி விசாரணை முடிவு

நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இன்னொரு முடிவு அஸ்மின் அலியைத் தொடர்பு படுத்தி வெளியிடப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி மீதான காவல் துறையின் விசாரணை முடிவு.

அஸ்மின் அலி பிகேஆர் கட்சியில் தொடர்வாரா? நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவாரா? அமைச்சர் பதவியைத் துறப்பாரா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு காவல் துறையின் விசாரணை முடிவுகள் விடைதரும்.

# 7 – அன்வார் இப்ராகிம் மீதான பாலியல் புகார் விசாரணை முடிவு

தொடர்கதையாக அன்வார் மீண்டும் எதிர்நோக்கும் பாலியல் புகார்களை விசாரித்து வரும் காவல் துறை எத்தகைய முடிவுகளை அறிவிக்கப் போகிறது என்பதையும் நாட்டு மக்கள் உன்னிப்பாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்தப் புகார்களில் இருந்து அன்வார் விடுவிக்கப்பட்டால் மட்டுமே அவர் அடுத்த பிரதமராக முடியும் என்பதால், காவல் துறையின் இந்த விசாரணை முடிவும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு முடிவாக 2020-இல் அமையும்.

# 8 – தெங்கு அட்னான் மீதான வழக்கு விசாரணை முடிவு

முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சரும் அம்னோ, தேசிய முன்னணியின் முன்னாள் தலைமைச் செயலாளருமான தெங்கு அட்னான் மீதான ஊழல் வழக்கு விசாரணையின் முடிவும் நாட்டில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

தெங்கு அட்னான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அரசியல் ரீதியாக பாதிப்புகள் எதுவும் இருக்காது என்றாலும், அவரது புத்ரா ஜெயா நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கு அது வழிவகுக்கும்.

அரசு ஊழியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட புத்ரா ஜெயா தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? அல்லது அங்குள்ள அரசு ஊழியர்கள் தங்களின் வாக்குகளை நம்பிக்கைக் கூட்டணிப் பக்கம் திசை திருப்புவார்களா? அரசு ஊழியர்கள் பொதுவில் எந்த அணியின் பக்கம்? என்பது போன்ற கேள்விகளுக்கு தெங்கு அட்னான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நடத்தப்படவிருக்கும் புத்ரா ஜெயா இடைத் தேர்தல் பதில்களை வழங்கும்.

# 9 – பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருக்கு எதிரான வழக்கும் – பேராக் மாநில நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின் ஊசலாட்டமும்!

பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் போல் யோங் சூ கியோங் மீதான பாலியல் வழக்கின் முடிவும் பேராக் மாநில அரசியலிலும், மலேசிய அரசியலிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.

அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதன் மூலம் அவரது சட்டமன்றத் தொகுதியான துரோனோவில் இடைத் தேர்தல் நடத்தப்படும். அந்தத் தேர்தலில் ஜசெக – நம்பிக்கைக் கூட்டணி மீண்டும் வென்றாக வேண்டும். 2008 முதல் ஜசெக தற்கோத்து வரும் தொகுதி துரோனோ என்றாலும் 2004-ஆம் ஆண்டில் இந்தத் தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்றியது என்பதையும் இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அவ்வாறு துரோனோ தொகுதியை மசீச – தேசிய முன்னணி கைப்பற்றினால், அதன் மூலம் தேசிய முன்னணி – பாஸ் இணைந்த கூட்டணி சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறும். அதைத் தொடர்ந்து பேராக் மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சி கவிழ்ந்து தேசிய முன்னணியின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்படலாம் அல்லது ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் மீண்டும் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படலாம்.

59 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் பேராக் மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி 30 தொகுதிகளைக் கொண்டிருந்தாலும் தேசிய முன்னணி 25 தொகுதிகளையும், பாஸ் 3 தொகுதிகளையும் கொண்டிருக்கின்றது. இணைந்தால் 28 தொகுதிகள் வருகின்றன. ஒரு சட்டமன்ற உறுப்பினர் சுயேச்சையாக செயல்படுகிறார். ஆக இரண்டு தொகுதிகள் பெரும்பான்மையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு அபாய அறிவிப்பாக துரோனோ சட்டமன்ற இடைத் தேர்தல் அமையலாம்.

# 10 – ஜாவி பாடத்தைக் கற்பிக்கும் முடிவு

ஜாவி பாடத்தை நான்காம் வகுப்பிலிருந்து கற்பிக்கும் அரசாங்க முடிவுக்கு எதிராக கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. தாய்மொழிப் பள்ளிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டு, பெற்றோர்கள் சம்மதிக்க வேண்டும் என்ற சலுகை காட்டப்பட்டிருந்தாலும், இந்த முடிவு காரணமாக நம்பிக்கைக் கூட்டணி மீதான செல்வாக்கு மக்களிடையே பெருமளவில் சரிந்து விட்டது என்பது கண்கூடு.

இதனால் அரசியல் சாதகத்திற்காக ஜாவி திட்டம் மீட்டுக் கொள்ளப்படுமா? அல்லது பிடிவாதமாக செயல்படுத்தி நம்பிக்கைக் கூட்டணி தனது வாக்கு வங்கியில் கணிசமாக பகுதியை இழக்குமா? என்பது போன்ற அரசியல் விடைகளைக் கொண்டது கல்வி அமைச்சின் ஜாவி பாட அறிமுகத் திட்டம்.

# 11 – பெர்சாத்து கட்சியின் தேர்தல்கள்

இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் தேசிய நிலையில் முதலாவது தேர்தல்களைச் சந்திக்கப் போகிறது மகாதீர் – மொகிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சி. அதற்கு முன்னதாக தனது தொகுதித் தேர்தல்களையும் நடத்தவிருக்கிறது.

தொகுதிகளின் மூலம் இரண்டாம் கட்டத் தலைவர்களாக இந்தக் கட்சியில் உருவெடுக்கப் போகிறவர்கள் யார்? யார்? மகாதீர் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்பாரா? மொகிதின் யாசின் தொடர்ந்து மகாதீருக்கு அடுத்த நிலையிலான பொறுப்பை ஏற்பாரா? முக்ரிஸ் மகாதீர் எந்தப் பதவிக்குப் போட்டியிடுவார்? உதவித் தலைவர்களாக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளின் மூலம், பெர்சாத்து கட்சியின் தலைமைத்துவமும், எதிர்காலமும் செதுக்கப்படும். நம்பிக்கைக் கூட்டணியில் அதன் வலிமை என்ன என்பதும் வெளிப்படும்.

#12 – ஜசெக கட்சித் தேர்தல்கள்

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜசெகவின் உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் லிம் குவான் எங் பதவிக் காலம் இரண்டு தவணைகளோடு முடிவடைவதால் புதிய தலைமைச் செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்பது சுவாரசியமான கேள்வி.

ஜசெகவைப் பொறுத்தவரை தலைமைச் செயலாளர்தான் தலைவருக்கு இணையான பதவி என்பதால், அந்தப் பொறுப்புக்கு வரப் போகிறவர் அந்தக் கட்சியை எவ்வாறு வழிநடத்தப் போகிறார்? லிம் குவான் எங், லிம் கிட் சியாங் என்ற இருபெரும் அரசியல் மாமலைகளுக்கு இடையில் புதிய தலைமைச் செயலாளர் எப்படிச் செயல்படுவார்? அதன் அடுத்த கட்ட தலைவர்களாகத் தேர்வு பெறப் போகும் 20 மத்திய செயலவை உறுப்பினர்கள் யார்? அவர்களில் யாருக்கு எந்தப் பொறுப்பு வழங்கப்படும்? என்பது போன்ற பல கேள்விகளின் விடைகள், அந்தக் கட்சியின் அமைப்பைச் செதுக்கும் என்பதோடு, அதன் எதிர்காலத்தையும், நம்பிக்கைக் கூட்டணியில் அதன் அங்கத்துவத்தையும் தீர்மானிக்கும்.

# 13 – நம்பிக்கைக் கூட்டணிக்கு எதிராக தேசிய முன்னணியின் நம்பிக்கையில்லாத் தீர்மானம்

தற்போது நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்து வந்தாலும், பிரதமர் பதவி மாற்றம் நிகழும்போது அன்வார் இப்ராகிமுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து அதன் மூலம் இந்த ஆட்சியை வீழ்த்த தேசிய முன்னணி வியூகம் வகுத்து வருவதாக ஆரூடங்கள் நிலவுகின்றன.

அன்வாரை அடுத்த பிரதமராக நீடிக்க விட்டால், அவர் ஏகபோக பலம் பெற்றுவிடுவார், மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற்று விடுவார், அவரது இஸ்லாமியப் பின்னணியால் பாஸ் கட்சியின் செல்வாக்கிலும் பாதிப்பு ஏற்படும் என்பது போன்ற அம்சங்களால் அவரைத் தடுக்கும் முயற்சியை தேசிய முன்னணி – பாஸ் இணைந்து மேற்கொள்ளக் கூடும்.

அந்த முயற்சியில் சபா, சரவாக் கட்சிகளையும் பெர்சாத்து போன்ற கட்சிகளையும், அஸ்மின் அலி போன்ற சில பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேசிய முன்னணி வெற்றிகரமாகத் தங்களுடன் இணைத்துக் கொள்ள முடியும் என்றால், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி பெரும்பான்மையோடு தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா என்பது கேள்விக் குறிதான்!

அத்தகைய முடிவை அம்னோ – தேசிய முன்னணி எடுக்குமா? அப்படி எடுத்தால் அதன் மூலம் அம்னோவிலேயே பிளவு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதால் அத்தகைய முடிவைத் தவிர்த்து விடுமா? அன்வாரையே பிரதமராக நீடிக்க விடுமா?

தேசிய முன்னணி அத்தகைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரும் முடிவைக் கைவிட்டாலோ – அல்லது அத்தகைய முயற்சியில் தோல்வியடைந்தாலோ – நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சி மகாதீர் தலைமையிலோ, அன்வார் தலைமையிலோ 2023 வரை நீடிக்கும்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்று ஆட்சி கவிழ்ந்தால், மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி அமையலாம் அல்லது மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.

பார்ப்போம்!

2020 நமக்கு எத்தகைய அதிரடிகளை – ஆச்சரியங்களை நிகழ்த்திக் காட்டப் போகிறது என்று!

-இரா.முத்தரசன்