Home One Line P1 அரசியல் பார்வை : 100 நாட்களை வெற்றிகரமாக கடக்கும் 8-வது  பிரதமர் மொகிதின் யாசின் –...

அரசியல் பார்வை : 100 நாட்களை வெற்றிகரமாக கடக்கும் 8-வது  பிரதமர் மொகிதின் யாசின் – தொடர்ந்து தாக்குப் பிடிப்பாரா?

742
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவின் எட்டாவது பிரதமராக கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பதவியேற்ற பிரதமர், டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது பதவியில் 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டார்.

பிரதமராக நியமிக்கப்பட்டவுடன் மார்ச் 9-ஆம் தேதி 32 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை அவர் அறிவித்தார்.

அந்த அமைச்சரவையிலும் ஒரு புதுமையை அவர் கையாண்டார். இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு துணைப் பிரதமர் என ஒருவரை அவர் நியமிக்கவில்லை. அதற்குப் பதிலாக நான்கு அமைச்சர்களைக் கொண்ட நான்கு மூத்த அமைச்சர்களை கொண்ட ஓர் அமைச்சரவைக் குழுவை அவர் நியமித்தார்.

கொவிட்-19 பிரச்சனைகளை சிறப்பாகக் கையாண்டார்

#TamilSchoolmychoice

அவர் பதவி ஏற்ற காலத்தில் கொவிட்-19 பிரச்சனை நாட்டில் மட்டுமின்றி உலகளாவிய நிலையிலும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.

சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் சிறந்த தலைமைத்துவத்தை கொண்டவர். தனது துறையில் ஆற்றலும் அனுபவமும் கொண்டவர். அவரை முன்னணியில் நிறுத்தி, அவரின் மேற்பார்வையின் கீழ் கொவிட்-19 பிரச்சினையை சிறப்பாக கையாண்டார் மொகிதின்.

சுகாதார அமைச்சர் எங்கிருக்கிறார் என்ற கேள்விகள் எழும் வண்ணம் அவர் பின்னணியில் வைக்கப்பட்டார். அவர் முன்னணிக்கு வந்து “வாய்திறந்த” ஒரிரண்டு தருணங்களில் கூட, உதிர்த்த முரண்பாடான கருத்துகளால், இணையவாசிகளின் வசைபாடல்களுக்கு ஆளானார்.

மொகிதினுக்கு வாய்த்த சிறந்த நிதியமைச்சர்

மொகிதின் யாசின் புதிதாக நியமித்த நிதியமைச்சர் தெங்கு சாப்ருல், அவருக்கு கிடைத்த மற்றொரு சிறந்த அமைச்சராகத் திகழ்ந்தார்.

வங்கி பின்புலமும், நிதி நிர்வாகத்தில் அனுபவமும் கொண்ட தெங்கு சாப்ருல் நிதி அமைச்சு விவகாரங்களையும், மக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் சிறப்பாகக் கையாண்டார்.

அதேவேளையில் அவர் எந்த ஓர் அரசியல் பின்னணியும் இல்லாதவர் என்பதும் கட்சி சார்பற்றவர் என்பதும் அவர் சுதந்திரமாக இயங்கவும், அரசியல் தலையீடுகள் இன்றி செயல்படவும் வாய்ப்பாக அமைந்தது.

கொவிட் -19 பிரச்சினையில் பிரதமர் சிறப்பாக செயல்பட்டார், சிறந்த நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்கினார் என்பதில் ஐயப்பாடு கிடையாது.

அந்த வகையில் ஒரு நல்ல நிதியமைச்சர் – அரசியல் சர்ச்சைகளை முதுகில் சுமந்திராத ஒருவர் – அமைந்தது மொகிதினின் சிறந்ந செயல்பாடுகளில் பெரிதும் உதவியது.

அவர் பிரதமர் ஆன விதம் பொதுமக்களிடையே அதிருப்தியை தோற்றுவித்திருந்தது. ஆனால், கொவிட்-19 பிரச்சனையை அவர் கையாண்ட விதம் அந்த அதிருப்திகளை பெருமளவில் குறைத்தது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும் பிறப்பிக்கப்பட்டு சிறப்பாக அந்தக் கட்டுப்பாடுகள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

இஸ்மாயில் சப்ரி – மொகிதினின் இன்னொரு சிறந்த அமைச்சர்

அந்த விதத்தில் மொகிதின் யாசினுக்கு வாய்த்த இன்னொரு சிறந்த அமைச்சர்  இஸ்மாயில் சப்ரி யாக்கோப். நாள்தோறும் இஸ்மாயில் சப்ரி மட்டுமே கொவிட்-19 தொடர்பான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

தடுமாற்றங்கள் இன்றி தெளிவாக, பொது மக்களுக்குப் புரியும் மொழியில் அவர் தொலைக்காட்சியில் தினமும் பிரச்சனைகளை எடுத்துரைத்த விதம் மக்களைக் கவர்ந்தது.

பிரதமரின் இன்னொரு சாதனை அம்சம் நிதி ஒதுக்கீடுகள்

கொவிட்-19 பாதிப்புகளை எதிர்த்துப் போராட சுகாதார அமைச்சுக்கு 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்தார் பிரதமர். கூடுதலான சுகாதார அமைச்சு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தையும் அவர் அறிவித்தார். 250 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பிரிஹாதின் பொருளாதார ஊக்குவிப்பு திட்ட நிதி ஒதுக்கீடு அதில் ஒன்று.

அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக 35 பில்லியன் ரிங்கிட் கூடுதல் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தையும் அவர் அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், வணிக நிறுவனங்களுக்கு தலா 3000 ரிங்கிட் வழங்கும் உதவித் திட்டத்தையும் அவர் அறிவித்தார். இப்படி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் மூலமாக அவர் மீதான மதிப்பும் மரியாதையும் பொதுமக்களிடையே கூடியது என்றால் மிகையாகாது.

மொகிதினின் மாண்பைக் குறைத்த ஒருநாள் நாடாளுமன்றக் கூட்டம்

எனினும் அவரது அரசியல் மாண்பை சற்றே குறைக்கும் வண்ணம் மே 18-இல் நடைபெற்றது ஒருநாள் நாடாளுமன்ற கூட்டம்.

மாமன்னர் உரையோடு, விவாதங்களின்றி முடிவடைந்த நாடாளுமன்ற கூட்டம் அரசியல் கட்சிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் அதிருப்தியை தோற்றுவித்தது. ஜனநாயக விரோதம் என்ற கண்டனக் குரல்களும் எழுந்தன.

கொவிட்-19 பிரச்சனைகளை பயன்படுத்தி நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு முரணாக அவர் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆகக் கடைசியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி வழி மக்கள் இடையே உரையாற்றிய பிரதமர் “மீட்சி பெறும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்” என்ற நற்செய்தியை வழங்கியதோடு எதிர்வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடமாட்ட கட்டுப்பாடுகள் மீட்சி பெறும் காலகட்டமாக அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்

மாநிலங்களுக்கு இடையிலான பயணத் தடைகளும் நீக்கப்பட்டுள்ளன.

மொகிதினின் அடுத்த கட்ட சவால்கள் என்ன?

யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில், ஆனானப்பட்ட மகாதீரையே வீழ்த்தி, பிரதமராக தனது பதவி காலத்த்தில் 100 நாட்களை வெற்றிகரமாக கடந்து இருக்கின்றார் மொகிதின்.

அவருக்கு இரண்டு பெரும் பிரச்சினைகள் அவருக்கு முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன.

முதலாவது, கட்சியில் அவருக்கும் மகாதீருக்கும் இடையில் தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. மகாதீரிடமிருந்து அந்தக் கட்சியை மொகிதினால் கட்சியினரின் ஆதரவு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கைப்பற்ற முடியுமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி.

இப்போதைக்கு அமைச்சரவைப் பதவிகள் மூலமும், அரசாங்க நிறுவன நியமனங்கள் மூலமும் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அவர் ‘வளைத்திருக்கிறார்’ என்பதுதான் உண்மை. கட்சியில் பெரும்பான்மை ஆதரவை அவர் இன்னும் நிரூபிக்கவில்லை.

பிரதமராக இருப்பதால் சங்கப் பதிவிலாகாவின் சில சாதகமான முடிவுகளைப் பெற்றிருக்கிறார். அவ்வளவுதான்!

பெர்சாத்து கட்சியைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றால் மட்டுமே மொகிதினின் எதிர்கால அரசியல் எந்த திசையில் செல்லும் – அது வெற்றிப் பாதையா என்பது நிர்ணயிக்கப்படும்.

அவருக்கு முன்னால் இருக்கும் மற்றொரு சவால் நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பது!

எதிர்வரும் ஜூலை மாதத்தில் அவர் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டி நடத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

இதற்கிடையில் மகாதீர், அன்வார் இப்ராகிம் மீண்டும் இணைந்து பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற ஆரூடங்களும் வலுத்து வருகின்றன. சரவாக் மாநிலத்தின் ஜிபிஎஸ் என்ற காபுங்கான் சரவாக் கூட்டணி கட்சிகளும்  தங்களின் ஆதரவை வழங்குவார்கள் என்ற ஊகங்களும் பரவுகின்றன.

இதனையும் மொகிதின் யாசின் எவ்வாறு சமாளிப்பார் என்பது போகப்போகத்தான் தெரியும்.

அம்னோ-பாஸ் மொகிதினுக்கு ஒத்துழைக்குமா? கைவிடுமா?

அம்னோ-பாஸ் இரு கட்சிகளும் தங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு பற்றித்தான் அதிகம் பேசுகின்றன. செயல் வடிவில் காட்டுகின்றன. மாறாக மொகிதின் தலைமையிலான பெர்சாத்து கட்சியுடனான ஒத்துழைப்பு குறித்து அந்த இரண்டு கட்சிகளும் அதிகமாக வாய் திறப்பதில்லை.

யாருக்குப் பெரும்பான்மை என்ற குழப்பத்தினால் பொதுத்தேர்தலை மாமன்னர் இணக்கத்துடன் மொகிதின் நடத்துவதற்கு சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன.

அப்படி பொதுத் தேர்தல் நடந்தால் மொகிதின் தொடர்ந்து பிரதமராக நீடிக்க பொது மக்கள் வாக்களிப்பார்களா?

அம்னோவும் பாஸ் கட்சியும் மீண்டும் மொகிதினே பிரதமராகத் தொடர்வதற்கு ஆதரவு தருவார்களா என்பதும் கேள்விக்குறிதான்!

மொகிதினின் பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லை, தேசியக் கூட்டணிக்கு எங்களின் ஆதரவை மட்டுமே வழங்குகிறோம் என பல தருணங்களில் அம்னோ- பாஸ் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றனர்.

அம்னோ-பாஸ் மொகிதினையோ, பெர்சாத்துவையோ கைவிடலாம். தாங்கள் இருவரும் இணைந்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். அந்த வெற்றியின் பங்கை பெர்சாத்துவுக்கும் பிரித்துக் கொடுக்கத் தயங்குகிறார்கள்.

அன்வார் இப்ராகிம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி மீண்டும் மொகிதின் ஆதரவாளர்களையோ, அந்தக் கட்சியையோ மீண்டும் தங்களோடு சேர்த்துக் கொள்வார்களா என்பது இன்னொரு கேள்விக்குறி!

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், அம்னோ-பாஸ் மொகிதின் யாசினை கை கழுவும் சூழ்நிலை வரலாம். நம்பிக்கை கூட்டணியும் மீண்டும் அவரை இணைத்துக் கொள்ளும் சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே இத்தகைய குழப்பமான, கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலைகளில் மொகிதின் பிரதமராக தனது பயணத்தின் முதல் நூறு நாட்களைக் கடந்திருக்கிறார்.

எஞ்சிய நாட்களை எப்படிக் கடக்கப் போகிறார் என்பதில்தான் சுவாரசியங்களும், பரபரப்பான திருப்பங்களும் அடங்கியிருக்கின்றன.

-இரா.முத்தரசன்