தோக்கியோ – உலகம் முழுவதும் அதிக அளவில் விவாதிக்கப்படும் விவகாரமாகியுள்ளது, நிசான் மோட்டோர் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கார்லோஸ் கோன் துணிகரமாக ஜப்பானிலிருந்து லெபனானுக்குத் தப்பிச் சென்ற கதை.
ஜப்பானிலிருந்து அவர் வெளியேறியதும் அவர் எவ்வாறு அந்நாட்டின் காவல் துறை மற்றும் குடிநுழைவுத் துறைகளின் கண்காணிப்பிலிருந்து தப்பித்தார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டன.
அதுகுறித்த உறுதியான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. துருக்கி நாட்டைச் சேர்ந்த தனியார் வாடகை விமான நிறுவனத்தின் உதவியுடன் அவர் ஜப்பானிலிருந்து வெளியேறியிருக்கிறார். அந்தத் தனியார் விமானத்தில் அவர் பயணம் செய்தாலும் அவரது பெயர் பயணிகளின் பட்டியலில் இல்லாதவாறு அந்நிறுவனப் பணியாளர் ஒருவர் ஆவணங்களைத் தயாரித்து அதன் மூலம் சட்டவிரோதமாக கார்லோசை லெபனான் கொண்டு சென்றிருக்கிறார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகர் வாயிலாக அந்த விமானம் லெபனான் சென்றடைந்தது.
இதற்கிடையில் துருக்கிய காவல் துறையினர் இந்த விவகாரம் தொடர்பில் 4 விமானிகள் உட்பட எழுவரை விசாரணைக்காகக் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து எம்என்ஜி ஜெட் என்ற அந்தத் தனியார் நிறுவனம் இந்த சம்பவம் குறித்து குற்றவியல் புகார் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.