புத்ரா ஜெயா – அடுத்த கல்வி அமைச்சர் யார் என்ற கேள்விகள் நாடெங்கும் கேட்கப்பட்டு வரும் வேளையில், அந்தப் பதவியை பிரதமர் துன் மகாதீரே இடைக்காலத்திற்கு வகிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
2018-இல் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றவுடன் பிரதமராக பதவி வகித்தாலும் கல்வி அமைச்சராகவும் பணிபுரிந்து சில திட்டங்களைக் கொண்டுவர விரும்புவதாகவும் மகாதீர் அப்போதே கூறியிருந்தார். எனினும், பிரதமராகப் பதவி வகிப்பவர் அமைச்சுப் பொறுப்பை வகிக்கக் கூடாது என்ற நம்பிக்கைக் கூட்டணியின் கொள்கைக்கு ஏற்பவும், பொதுமக்களிடையே மகாதீரின் முடிவு பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியதாலும், மஸ்லீ மாலிக் கல்வி அமைச்சராக மகாதீரால் நியமிக்கப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் சிறப்பு சந்திப்பு ஒன்றை மகாதீர் நடத்தியதாகவும், இடைக்காலக் கல்வி அமைச்சராக அவர் பதவி வகிப்பார் என்றும் அவர் சார்ந்திருக்கும் பெர்சாத்து கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்வி அமைச்சரை மட்டும் தற்போதைக்கு நியமிக்காமல் முழுமையான அமைச்சரவை மாற்றத்திற்கு மகாதீர் திட்டமிட்டுள்ளதால், இடைக்காலக் கல்வி அமைச்சராக முதலில் பொறுப்பேற்று அந்த அமைச்சில் சில சீரமைப்புகளையும், வழிகாட்டுதல்களையும் செய்துவிட்டு அதன் பின்னர் புதிய கல்வி அமைச்சரை நியமிப்பதோடு, முழுமையான அமைச்சரவை மாற்றத்தையும் மகாதீர் மேற்கொள்வார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன