ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் சிறப்பான தூனா மீன் ஒன்றை ஏலத்தில் விடுவது என்பது தோக்கியோவில் உள்ள புகழ் பெற்ற மீன் சந்தையின் வழக்கமாகும். அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தோக்கியோ மீன் சந்தையில் 276 கிலோ எடை கொண்ட தூனா இரக மீன் ஒன்று 193.2 மில்லியன் ஜப்பானிய யென் விலையில் ஏலத்திற்கு விடப்பட்டது.
அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் இதன் விலை 1.8 மில்லியன் டாலர்களாகும்.
சுஷிசன்மாய் என்ற உணவகத் தொடர் நடத்தும் கியோமுரா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்த ஆண்டு இந்த மீனை ஏலத்தில் வாங்கியிருக்கிறது. கடந்த ஆண்டும் இதே நிறுவனம்தான் இத்தகைய மீனை ஏலத்தில் வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று ஏலத்திற்கு விடப்பட்ட தொகை ஜப்பானிய வரலாற்றில் இரண்டாவது பெரிய தொகையாகும். கடந்த ஆண்டு 278 கிலோ எடை கொண்ட தூனா மீன் 333.6 மில்லியன் யென் விலையில் ஏலத்திற்குப் போனது. இதுவே வரலாற்றில் மிகப் பெரிய தொகையாகும்.
இந்த மீனை விலைக்கு வாங்கிய உணவக உரிமையாளரான கியோஷி கிமுரா, மீனின் விலை அதிகம் என்றாலும் தனது உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தூனா மீன் இரகத்தை வழங்க வேண்டும் என்பதுதான் தனது நோக்கம் என்று கூறியிருக்கிறார்.