பாரிஸ்: இங்கு நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இன்றைய (ஜூலை 29) பதக்கப் பட்டியலின்படி ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா அதிரடியாக முன்னணி வகிக்கத் தொடங்கியுள்ளன.
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எப்போதுமே அதிரடி படைக்கும் நாடு சீனா. 5 தங்கப் பதக்கங்களுடன் முன்னணி வகிக்கிறது. 2-வது நிலையில் ஜப்பான் 4 தங்கப் பதக்கங்களுடனும், 3-வது நிலையில் தென் கொரியா 4 தங்கப் பதக்கங்களுடனும் முன்னணி வகிக்கின்றன. ஆஸ்திரேலியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நாடுகள் தங்கப் பதக்கங்கள் தவிர மற்றப் பதக்கங்களையும் வென்றுள்ளன. எனினும் அதிக தங்கப் பதக்கங்கள் பெற்ற நாடுகள்தான் பட்டியலில் முதலிடங்களைப் பெறும்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 26) ஒலிம்பிக்ஸ் கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் சனிக்கிழமை (ஜூலை 27) முதல் நாள் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறும் முதல் நாடாக சீனா திகழ்கிறது.
துப்பாக்கி சுடும் போட்டியில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளின் முதல் தங்கத்தை சீனா வென்றது.
பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 26 அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.