கோலாலம்பூர்: தமது அம்பேங்க் தனிப்பட்ட வங்கிக் கணக்கு செயல்பாடுகள் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஒப்புக்கொண்டார்.
ஜோ லோ மற்றும் முன்னாள் அம்பேங்க் தகவல் தொடர்பு மேலாளர் ஜோனா யூ இடையேயான பிளாக்பெர்ரி குறுஞ்செய்தி உரையாடல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நஜிப் இதனை தெரிவித்தார்.
அரசு துணை வழக்கறிஞர் டத்தோ வி.சீதம்பரத்தின் கேள்விக்கு பதிலளித்த நஜிப், காசோலைகளை வழங்குவதற்கும், தனது கடன் பற்று அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கும் ஜோ லோ தனது அம்பேங்க் கணக்கில், எப்போதும் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்வார் என்றும் ஒப்புக்கொண்டார்.
ஆகஸ்ட் 2014-இல் ஜோ லோ மற்றும் ஜோனா இடையே தொடர்ச்சியான உரையாடல்கள், இத்தாலியில் நஜிப்பின் கடன் பற்று அட்டையுடன் செய்யப்பட்ட 3.2 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள நகைகளை வாங்குவதை பிரதிபலிப்பதாகவும் நஜிப் ஒப்புக் கொண்டார்.
எவ்வாறாயினும், தனக்கும் ஜோ லோவுக்கும் இடையிலான பெரும்பாலான தொடர்புகள் அவரது முன்னாள் செயலாளர் மறைந்த டத்தோ அஸ்லின் அலியாஸ் மூலமாகவே நடந்தன என்றும் நஜிப் கூறினார்.
கடந்த புதன்கிழமை, நஜிப் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கின் நிலை குறித்து பெரும்பாலும் அஸ்லின் மூலமாகவும், சில சமயங்களில் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரி நிக் பைசல் அரிப் காமில் மூலமாகவும் அறிவிக்கப்பட்டதாக சாட்சியமளித்தார். ஆனால், ஜோ லோவுடன் சவுதி நன்கொடைகள் சம்பந்தப்பட்ட பணம் அனுப்புவதில் மட்டுமே சம்பந்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், நஜிப் தனது மூன்று கணக்குகளின் நிலை குறித்து எல்லா நேரங்களிலும் உண்மையானத் தகவலைக் கொண்டிருந்ததை ஏற்கவில்லை.
நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி முன் விசாரணை வருகிற ஜனவரி 20-ஆம் தேதி தொடரும்.