லண்டன், ஏப். 9-இங்கிலாந்தின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் (வயது 87) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.
வழக்கமான தலைவர்களுக்கு அரசு மரியாதையுடன் நடக்கும் இறுதிச்சடங்கை விட தாட்சரின் இறுதிச்சடங்கு சற்று வித்தியாசமாக நடைபெற உள்ளது. அதாவது, ராஜகுடும்பத்தினர் மற்றும் குறிப்பிடத்தக்க முக்கிய பிரமுகர்களுக்கான ராஜமரியாதை அவருக்கு வழங்கப்படுகிறது. செயின்ட் பால் தேவாலயத்தில் இச்சடங்குகள் நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து வேறு இடத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுபோன்று, ராஜகுடும்பம் அல்லாத வி.ஐ.பி.க்களுக்கு ராஜமரியாதையுடனான இறுதிச்சடங்கு, கடைசியாக 1965ல் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது.