கோலாலம்பூர் – மலேசியாவின் அதிகாரபூர்வ விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் எனப்படும் மாஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்ய அரசாங்கம் முன்வந்துள்ள நிலையில் அந்நிறுவனத்தின் பங்குடமைகளை வாங்குவதற்கு பல நிறுவனங்கள் பரிந்துரைகளைச் சமர்த்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாஸ் நிறுவனத்தின் 49 விழுக்காட்டுப் பங்குகளை வாங்க ஏர் பிரான்ஸ் – கேஎல்எம் விமான நிறுவனங்கள் முன்மொழிந்துள்ளன. ஏர் பிரான்ஸ், பிரான்ஸ் நாட்டு நிறுவனமாகும். கேஎல்எம் நெதர்லாந்து நாட்டின் விமான நிறுவனமாகும்.
ஜப்பான் ஏர்லைன்ஸ் 25 விழுக்காட்டு பங்குகளை வாங்க முன்வந்துள்ளது.
இதற்கிடையில் உள்நாட்டு நிறுவனங்களான ஏர் ஆசியா மற்றும் மலிண்டோ ஏர் இரண்டும் சில பரிந்துரைகளைத் தனித் தனியாகச் சமர்ப்பித்துள்ளன. மலிண்டோ ஏர் இந்தோனிசியாவின் லயன் ஏர் நிறுவனத்தின் மலேசியப் பிரிவு நிறுவனமாகும்.
மாஸ் நிறுவனத்தின் வணிகப் பயணத்தில் பல்வேறு பிரச்சனைகளை அந்த நிறுவனம் சந்தித்து வந்திருக்கிறது. கோடிக்கணக்கான நஷ்டத்தையும் சந்தித்திருக்கிறது. ஆனால், எம்எச் 370 விமானம் காணாமல் போனது, எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ஆகிய இரு சம்பவங்களும் அந்நிறுவனத்தின் தோற்றத்தை வெகுவாகச் சிதைத்து விட்டன.
அதைத் தொடர்ந்து 2018-இல் ஆட்சிக்கு வந்த புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மாஸ் நிறுவனத்திற்கு உகந்த புதிய வியூக வணிகப் பங்காளியை அடையாளம் காண்பதற்கு பரிந்துரைகளைக் கோரியிருந்தது.
நேற்று திங்கட்கிழமை (ஜனவரி 20) மாஸ் பங்குகளுக்கு 5 பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன எனத் தெரிவித்த பிரதமர் துன் மகாதீர் பரிந்துரைகள் சமர்ப்பித்த அந்நிறுவனங்கள் எவை என்பதைக் குறிப்பிடவில்லை.