கோலாலம்பூர் – பிரதமர் பதவியை அன்வாருக்கு பரிமாற்றம் செய்வதற்கு உரிய கால நிர்ணயத்தை துன் மகாதீர் செய்துவிட்டார் என்றும் சரியான நேரத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் நிதியமைச்சரும் ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் கூறியுள்ளார்.
“நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் கூடி இதற்கான தேதியை நிர்ணயம் செய்து உரிய நேரத்தில் அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படும்” என்றும் அவர் மேலும் கூறினார்.
பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் பதவிப் பரிமாற்றம் குறித்து பகிரங்கமாக யாரும் பேச வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.
இதே விவகாரம் குறித்து மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய லிம் குவான் எங் பதவிப் பரிமாற்றம் குறித்து கட்சிகளுக்குள் விவாதிப்பதுதான் நல்லது என்றும் எனினும் ஜனநாயக அமைப்பில் பதவிப் பரிமாற்றம் குறித்து யாரும் பகிரங்கமாகப் பேசக் கூடாது என தடைவிதிப்பது நியாயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.