Home One Line P1 “மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

2084
0
SHARE
Ad

கோலாலம்பூர்-  இன்று சனிக்கிழமை கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டு பெருநாளை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் “இந்நாட்டில் சமய விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருவதால் அந்த மரபை நாம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்” என மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

“கடந்த காலம் தொட்டு எந்தப் பெருநாளாக இருந்தாலும் மலேசிய மரபுப்படி திறந்த இல்ல உபசரிப்புக்களை நடத்தி ஒற்றுமையாக ஒரே இலக்கில் நோன்பு பெருநாள், சீனப்புத்தாண்டு, தீபாவளி, கிறித்துமஸ் ஆகிய பண்டிகைகளை கொண்டாடி வருவது மூவின மக்களின் ஒற்றுமையைக் காட்டுகிறது” என ம.இ.கா தேசியத் தலைவருமான விக்னேஸ்வரன் தமது சீனப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்தார்.

“இந்நாட்டில் மலாய், சீனர், இந்தியர் என்று பல் இன மக்கள் தத்தம் பாரம்பாரியங்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதைப் போல் வேறு எந்த நாட்டிலும் காண முடியாது. நாம் மதத்தால், மொழியால், இனத்தால் வேறுபட்டிருந்தாலும் பண்டிகை கொண்டாட்டம் என்று வரும் போது நாம் அனைவரும் இணைந்தே கொண்டாடி வருகின்றோம். இந்த சீனப்புத்தாண்டு பண்டிகையையும் அனைவருடனும் இணைந்து ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நோன்புப் பெருநாள், சீனப்புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை காலங்களின் போது நாம் அனைவரும் “மலேசியர்” என்ற உணர்வோடு திறந்த இல்ல உபசரிப்புக்களில் கலந்து கொண்டு அதனைக் கொண்டாடி மகிழ்கிறோம். தீபாவளி சமயத்தில் மலாய்க்காரர்கள், இந்தியர்கள் வீடுகளுக்கு வருகை தந்து இட்லி, தோசை உண்டு மகிழ்வதும், இந்தியர்கள் மலாய்க்காரர்கள் இல்லங்களுக்குச் சென்று கெதுப்பாட்டை உண்டு மகிழ்வதும் சீனர்களின் சீனப்புத்தாண்டில் அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழ்வதும் எங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும்” என்றும் தமது வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

“நாம் நமது சொந்த சமயம், கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை கொண்டுள்ளோம். அதனை இன்றளவும் கடைபிடித்து வரும் வேளையில் மற்ற இனங்களின் சமயம், பாரம்பரியத்தை மதிக்கும் மனப்பக்குவத்தையும் நாம் கொண்டுள்ளோம். மத சுதந்திரம் உள்ள மலேசிய நாட்டில் மத நல்லிணக்கமும் இன்றளவும் பேணப்பட்டு வருகிறது. இந்த கலாச்சாரத்தை வேறு எந்த நாட்டிலும் காண முடியாது. மலேசியர்கள் என்ற உணர்வில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நாம் அனைவரும் இந்த சீனப்புத்தாண்டையும் ஒற்றுமையாக கொண்டாடுவோம்” என்றும் விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.