கோலாலம்பூர்: எம்.இந்திரா காந்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனம், தங்கள் வாடிக்கையாளரின் காணாமற்போன மகளைத் தேடுவது குறித்து காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோரின் கருத்தை நிராகரித்துள்ளது.
ஒரு “மகிழ்ச்சியான முடிவை” நோக்கி செயல்படுவதாகக் காவல் துறைத் தலைவர் கூறியதைக் குறிப்பிட்டு, ராஜ் அண்ட் சாக், கூட்டரசு நீதிமன்றத்தின் உத்தரவைக் கருத்தில் கொண்டு இந்த கருத்து தேவையற்றது என்று வாதிட்டுள்ளது.
“(இந்திராவின் முன்னாள் கணவர்) கே.பத்மநாதனை (முகமட் ரிட்சுவான் அப்துல்லா) கைது செய்து பிரசன்னா டிக்ஸாவை இந்திராவிடம் திருப்பி ஒப்படைக்க காவல் துறைத் தலைவர் மற்றும் காவல்துறையினருக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வரும்போது இரு தரப்புக்கும் சாதகமான சூழ்நிலைக்கு முற்றிலும் அவசியமில்லை.”
“அவர் இரு தரப்புக்கும் சாதகமான சூழ்நிலையை நாடுகிறார். அவரது கருத்து எவரது மனதையும் கவர வேண்டிய அவசியம் இல்லை. அவர் எந்த தரப்பினரையும் மகிழ்விக்கத் தேவையில்லை.”
“உங்களுடையது பணி என்னவென்றால் கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கீழ்ப்படிய வேண்டும். கூட்டரசு நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த காவல் துறைத் தலைவர் தவறிவிட்டார், ”என்று அந்நிறுவனம் இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் கூறியது.
கடந்த 2009-ஆம் ஆண்டில் 11 மாதமான பிரசன்னாவை பத்மநாதன் கடத்திச் சென்று விட்டார். அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய சிறிது காலத்திலேயே, முகமட் ரிட்சுவான் அப்துல்லா என்ற பெயரைப் பெற்றார்.
இந்திராவின் முன்னாள் கணவரைக் கண்டுபிடிக்குமாறு கூட்டரசு நீதிமன்றம் பின்னர் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இன்று வரையிலும் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறப்பு பணிக்குழுவை அமைத்தனர்.
இதற்கிடையில், பிரசன்னா மற்றும் அவரது தந்தை இருக்கும் இடம் குறித்து காவல்துறைத் தலைவருக்குத் தெரியுமா என்ற கேள்விக்கு வித்திட்டுள்ளதாக இந்திரா காந்தியின் தரப்பு சந்தேகிக்கிறது. காவல் துறைத் தலைவரின் கருத்துக்கள் இதற்கு வழிவகுத்துள்ளது என்று ராஜ் அண்ட் சாக் கூறியுள்ளது.
“இது மில்லியன் கணக்கான மலேசியர்களின் மனதில் கேள்வியை எழுப்புகிறது. பத்மநாதன் (முகமட் ரிட்சுவான்) எங்கே இருக்கிறார் என்று காவல் துறைத் தலைவருக்கு உண்மையில் தெரியுமா? பிரசன்னா எங்கே என்று தெரியுமா?”
“இரு தரப்புக்கும் சாதகமான நிலைமை என்றால் என்ன? இந்த கேள்விகளுக்கு எங்களிடம் பதில்கள் இல்லை,” என்று அது மேலும் கூறியது.
கடந்த செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹாமிட், இந்த விஷயத்தில் தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டதாகவும், வழக்கை மேலும் இழுக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் சபதம் செய்திருந்தார்.