Home One Line P1 மரத்தாண்டவர் ஆலய விவகாரத்தில் பேருதவி புரிந்த விக்னேஸ்வரனுக்கு நிர்வாகத்தினர் நன்றி

மரத்தாண்டவர் ஆலய விவகாரத்தில் பேருதவி புரிந்த விக்னேஸ்வரனுக்கு நிர்வாகத்தினர் நன்றி

620
0
SHARE
Ad
சங்கப் பதிவிலாகாவின் ஒப்புதல் கடிதத்துடன் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயப் பொறுப்பாளர்கள்

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 1) நண்பகலில் கோலாலம்பூரில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மாரான் ஸ்ரீ மரத்தாண்டவன் ஆலய நிர்வாகத்தினர் ஆலயப் பதிவு இரத்தாகவிருந்த நிலையில் அதற்காகப் போராடிய தங்கள் நிர்வாகத்தினருடன் துணை நின்று பேருதவி புரிந்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

அதே வேளையில் இந்த விவகாரத்தில் ஆதரவுக் கடிதம் வழங்கி தங்களுக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, மலேசிய இந்து சங்கம், ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஆலயப் பொறுப்பாளர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

ஆலயத் தலைவர் இராமகிருஷ்ணன் உரையாற்றுகிறார்…

பத்திரிகையாளர் சந்திப்பில் ஆலயத்தின் தலைவர் இராமகிருஷ்ணன், செயலாளர் பூங்காவனம், துணைச்செயலாளர் மருதவேலு, பொருளாளர் டத்தோ தமிழ் செல்வன் ஆகியோர் தனித் தனியாக உரையாற்றி, ஆலயம் கடந்த சில மாதங்களாக எதிர்நோக்கிய பிரச்சனைகளையும், சங்கப் பதிவிலாகா விவகாரத்தினால் ஏற்பட்ட சிக்கல்களையும் விவரித்தனர்.

#TamilSchoolmychoice

சங்கப் பதிவிலாகா பிரச்சனையில் அதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக டத்தோ தமிழ்ச் செல்வன் சிறப்பாகச் செயல்பட்டு பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்த்து வைத்ததற்காக ஆலய நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்ததோடு, ஆலயத்தின் வங்கிக் கணக்குகளை இயக்க முடியாமல் ஆலயத்தின் அன்றாட வழிபாடுகள் தொடர்வதிலும் செலவுகளை ஈடுகட்டுவதிலும் தாங்கள் சிரமத்தை எதிர்நோக்கியபோது, தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து ஆலயப் பணிகள் தொடர்வதற்கு உதவி புரிந்த டத்தோ தமிழ்ச் செல்வனுக்கு ஆலய நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

மரத்தாண்டவர் ஆலயப் பொருளாளர் தமிழ்ச் செல்வன்

“குறிப்பாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரனை எனது தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் நான் சந்திக்கச் சென்றபோது, அவர் மரத்தாண்டவர் ஆலயம் என்பதற்காகவோ, நான் கொண்டு சென்ற பிரச்சனை என்பதற்காகவோ, உடனடியாக தீர்வு நடவடிக்கையில் இறங்கவில்லை. முதலில் அனைத்து ஆவணங்களையும் அவரே நேரடியாக பரிசீலித்தார். படித்துப் பார்த்தார். சட்ட ரீதியாகவும் பிரச்சனையை அணுகினார். ஆலய விவகாரத்திலும், நிதி விவகாரத்திலும் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே தீவிர நடவடிக்கையில் இறங்கினார். இரவோடு இரவாக சங்கப் பதிவிலாகாவுக்குரிய கடிதம் தயார் செய்யப்பட்டாலும், உள்துறை துணையமைச்சர் அடுத்த நாள் வெளிநாடு செல்லவிருந்தார். அந்நிலையிலும் உள்துறை துணையமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மதிப்பு கொடுத்து தனது கார் ஓட்டுநரை அனுப்பி விக்னேஸ்வரனின் முறையீட்டுக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு சங்கப் பதிவிலாகாவுக்கு தனது குறிப்புகளோடு அந்தக் கடிதத்தை அனுப்பி வைத்தார்” என ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயப் பொருளாளர் தமிழ்ச் செல்வன் விரிவாக விவரித்தார்.

ஆலயச் செயலாளர் பூங்காவனம்

“மேலும், உள்துறை அமைச்சருடன் விக்னேஸ்வரன் இந்த விவகாரம் குறித்து நேரடியாகப் பேசினார். அதே போல, பலரும் சொல்வது போல் சங்கப் பதிவிலாகாவினர் மோசமானவர்கள் அல்ல என்பதையும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் எங்களை மிகவும் மரியாதையோடு நடத்தினர். எல்லாப் பிரச்சனைகளையும் விரிவாக ஆராய்ந்து எங்களின் சூழ்நிலையையும், நடப்பு விவகாரத்தையும் நன்கு புரிந்து கொண்டனர். அந்த வகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் சிபாரிசுக் கடிதமும் நிலைமையை விளக்கி அவர் விவரித்திருந்ததும், இந்தப் பிரச்சனைகள் தீர்க்க முடிந்ததற்கான காரணம் என சங்கப் பதிவிலாகவினரே எங்களுக்குத் தெரிவித்தனர். இனி மரத்தாண்டவர் தனது பழைய பெயரிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதியும் தந்தனர். அதே வேளையில் ஆலயத் தரப்பிலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றும் தமிழ்ச் செல்வன் மேலும் தனதுரையில் கூறினார்.

தொடர்ந்து டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சார்பாக உரையாற்றிய அவரது பத்திரிகை செயலாளர் சிவசுப்ரமணியம், “டான்ஸ்ரீ சார்பாக ஒரே ஒரு கருத்தை மட்டும் முன்வைக்க விரும்புகிறேன். மரத்தாண்டவர் ஆலய விவகாரத்தில் தான் தலையிட்டதற்குக் காரணம், வெளிப் பிரச்சனைகளால் எந்த ஆலயத்தின் வழிபாடுகளும், சடங்குகளும் தடைபட்டு விடக் கூடாது, என்பதுதான் தனது நோக்கம் என்று டான்ஸ்ரீ கூறினார். அதற்கேற்ப, வேறுசில ஆலயங்களின் பிரச்சனைகளும் இதே போன்று தீர்த்து வைப்பதற்கு எங்களிடம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்” என்று கூறினார்.

தமிழ்ச் செல்வன் – ஆலயத் துணைச் செயலாளர் மருதவேலு…

இனி எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விட்டதால், இனி ஆலயத்தின் வருடாந்திர விழா, பங்குனி உத்திர விழா போன்றவற்றை நடத்துவதிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பாபிஷேகத்தை நடத்தி முடிப்பதிலும் ஆலய நிர்வாகம் தீவிரமாகப் பாடுபடும் என்றும் ஆலய நிர்வாகத்தினர் உறுதி வழங்கினர்.

மஇகாவின் நிர்வாகச் செயலாளர் இராமலிங்கமும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

விக்னேஸ்வரன் சார்பில் உரையாற்றிய அவரது பத்திரிகைச் செயலாளர் சிவசுப்ரமணியம்