மணிலா – கொரொனாவைரஸ் பாதிப்பால் இதுவரையில் மரணமடைந்தவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள்தான் என்று தகவல்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் சீனாவுக்கு வெளியே முதன் முறையாக ஒருவர் பிலிப்பைன்சில் மரணமடைந்துள்ளார். வுஹான் நகரிலிருந்து பிலிப்பைன்ஸ் வந்த அவர் ஜனவரியில் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கொரொனாவைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 305 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 14,300 பேர்கள் கொரொனாவைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வுஹான் நகரிலிருந்து கொரொனாவைரஸ் டிசம்பரில் பரவத் தொடங்கியது முதல் தற்போது 25 நாடுகளிலும், பிரதேசங்களிலும் கொரொனா வைரஸ் பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மூடப்பட்டுள்ள வுஹான் நகரில் சிக்கிக் கொண்டுள்ள தங்களின் நாட்டு மக்களை வெளியேற்றி சொந்த நாடுகளுக்கு திரும்ப அழைத்து வர பல நாடுகளும் தற்போது முயற்சியில் இறங்கி இருக்கின்றன.
கொரொனாவைரஸ் பரவலைத் தொடர்ந்து சீனாவின் நகர்களில் இதுவரையில் 60 மில்லியன் மக்கள் போக்குவரத்துத் தடைகளால் வெளியேற முடியாமல் முடக்கப்பட்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் கொரொனாவைரசுக்கு எதிராகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.