வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற பிப்ரவரி 24 முதல் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
புது டில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்குச் சென்று, இருதரப்பு கூட்டாட்சியை மேலும் வலுப்படுத்தவும், அமெரிக்க மக்கள் மற்றும் இந்திய மக்களிடையே வலுவான மற்றும் நீடித்த பிணைப்புகளை எடுத்துக்காட்டும் பயணமாகவும் இது அமையும் என்று அது தெரிவித்துள்ளது.
அதிபர் டிரம்புடன், அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்ப்பும் உடன் வருகிறார். அவர்கள் பிப்ரவரி 24 முதல் 25 வரை இந்தியாவில் இருப்பார்கள் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஸ்டீபனி கிரிஷாம் தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வார இறுதியில் தொலைபேசியில் இது குறித்து பேசினர் என்றும் அவர் கூறினார்.
“வார இறுதியில் ஒரு தொலைபேசி அழைப்பின் போது, அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இந்த பயணம் இந்தியா-அமெரிக்க மூலோபாய பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அமெரிக்க மற்றும் இந்திய மக்களிடையே வலுவான மற்றும் நீடித்த பிணைப்பை எடுத்துக்காட்டுவதாகவும் ஒப்புக் கொண்டனர்” என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள புது டில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு அதிபரும், அமெரிக்க முதல் பெண்மணியும் பயணம் செய்வார்கள்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 2010 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் இந்தியா சென்றது குறிப்பிடத்தக்கது.