பெய்ஜிங்: கொவிட்-19 காரணமாக சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று புதன்கிழமை நிலவரப்படி 242 அதிகரித்து 1,310 ஆக உயர்ந்துள்ளது என்று ஹூபே சுகாதார ஆணையம் இன்று வியாழக்கிழமை தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இது பத்து மடங்கு அதிகம் என்று அது குறிப்பிட்டுள்ளது.
ஹூபேயில் மேலும் 14,840 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அம்மாகாணத்தில் மொத்தம் 48,206 வழக்குகள் பதிவிடப்பட்டுள்ளதை அது உறுதி செய்தது.
இதனிடையே, இந்த கொடிய நோய்க் கிருமி பரவத் தொடங்கியதிலிருந்து இன்று வியாழக்கிழமை வரையிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,363 ஆக உயர்ந்துள்ளது.
5,680 நோயாளிகள் இந்நோயிலிருந்து மீண்டதாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் இந்நோய் குறித்து 18 வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் மூன்று வழக்குகள் குணப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 நோய்தொற்று காரணமாக உலகளவில் வணிகம் மற்றும் இதரத் துறைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சீனாவில் 70,000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இது உள்ளூர் திரைப்பட வணிகத்திற்கு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய திரைப்பட வெளியீடுகள் இரத்து செய்யப்பட்டு திரையரங்குகள் மூடத் தொடங்கி உள்ளன.