கோலாலம்பூர்: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அமைச்சரவைக்கு கொண்டு வருவதற்கான பாஸ் கட்சியின் நடவடிக்கையை துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் விமர்சித்துள்ளார்.
பாஸ் அவ்வாறு செய்ய விரும்புவதற்கு முன்னர் டாக்டர் மகாதீர் பிரதமராக வருவதற்கு நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் நீண்டகாலமாக ஆதரவை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.
“பாஸ் கட்சிக்கு முன்னமே நம்பிக்கைக் கூட்டணி பிரதமருக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது ,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, பாஸ் துணைத் தலைவர் டத்தோ துவான் இப்ராகிம் துவாம் மான் மற்றும் பாஸ் கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹசான் ஆகியோர் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு அமைச்சரவைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக அறிவித்தனர்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, டாக்டர் மகாதீர் பதவிக்காலம் முடியும் வரை பிரதமராக இருக்க ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் கூறினார்.
பிரதமரின் தலைமையில் பல தரப்புகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆயினும், இதுவரையிலும் எந்தவொரு தரப்பும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.