கோலாலம்பூர்: தாம் பிரதமர் பதவியில் நிலைத்திருப்பது குறித்து எந்தவொரு குறிப்பிட்ட கட்சி இயக்கத்திலும் அல்லது நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.
இந்த நவம்பரில் மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சமாநாட்டிற்குப் பிறகு அன்வாரிடம் பிரதமர் பதவியினை ஒப்படைப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரென்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது பதவிக்காலம் முடியும் வரை பிரதமர் பதவியை வகிக்க ஆதரவளிக்கும் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திட்டதாக டி ஸ்டார் செய்தித்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
அது குறித்து கேள்வி எழுப்பியபோது பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.
“இன்று நம்பிக்கைக் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது (நாடாளுமன்றத்தில்), அது எப்படி 138- ஆக இருக்க முடியும், மற்றவர்களுக்கு வேலைகள் உள்ளன. எனக்குத் தெரியவில்லை அவர்கள் அதை எப்படி செய்ய முடியும். எப்படி அத்தகைய எண்களைப் பெற்றார்கள் என்று தெரியவில்லை ” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“நான் எல்லா வகையான கதைகளையும் கேட்டேன். (சிலர் சொல்கிறார்கள்) 20 வருடத்திற்கு பிரதமராக இருக்க வேண்டுமென்று. எனக்கு 94 வயது, கூடிய விரைவில் 95 வயதாகிடும். அதற்கான சக்தி இல்லை”
“நான் ஏபெக்குப் பிறகு பதவி விலகுவேன் என்று உறுதியளிக்கிறேன். எனவே நான் எனது வாக்குறுதியைக் கடைப்பிடிக்கிறேன்.” என்று அவர் கூறினார்.
டாக்டர் மகாதீரை சந்தித்து அதிகாரப் பரிமாற்றம் குறித்து விவாதித்ததாக அன்வார் நேற்று செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.
அம்னோ, பாஸ் மற்றும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான பிகேஆர் உறுப்பினர்களின் முயற்சிகள் இந்த குற்றச்சாட்டுக்குப் பின் இருப்பதாக அவர் கூறினார்.
“பிரதமர் இந்த முயற்சியில் ஈடுபடவில்லை, ஆனால் அவர் வாக்குறுதியளித்தபடி பதவி விலகுவார் என்று கூறினார்,” என்று அன்வார் கூறினார்.