இந்தப் போட்டிகளில் விளையாடும் விளையாட்டாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், தனியாக விளம்பரங்களின் மூலம் அவர்கள் ஈட்டும் வருமானம் – இப்படி எல்லாமே கோடிக்கணக்கில்தான் இருக்கும்.
உலகில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு காற்பந்து போட்டிகளை நேரலையாக ஒளிபரப்புவதற்கான உரிமங்களை வழங்குவதன் மூலம் ஆண்டுதோறும் இங்கிலீஷ் பிரிமியர் லீக் அமைப்பு பெரும் வருமானத்தைப் பெறுவதோடு, இந்தக் காற்பந்துப் போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்களும் விளம்பரங்களின் வழி கணிசமான வருவாயை ஈட்டுகின்றன.
அந்த வகையில் மலேசியாவில் இபிஎல் காற்பந்து போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பும் உரிமத்தைப் பெற்றிருக்கிறது அஸ்ட்ரோ.
இந்நிலையில் இந்த நடைமுறை எல்லாமே மாறக் கூடும் என்ற சூழ்நிலைகள் எழுந்திருக்கின்றன.
நெட்பிலிக்ஸ் பாணியில் இபிஎல் போட்டிகளை இணையம் வழி நேரலையாக ஒளிபரப்பி நேரடியாகவே காற்பந்து இரசிகர்கள் கட்டணம் செலுத்தி பார்க்கக் கூடியத் திட்டம் ஒன்றை இபில் அமைப்பு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
அந்தத் திட்டம் அமுலுக்கு வந்தால் அஸ்ட்ரோவின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்படலாம். ஏற்கனவே வெளிநாட்டு நிகழ்ச்சிகளை வாங்குவதற்கான கட்டணங்களை அமெரிக்க டாலர்களில் செலுத்த வேண்டியதிருப்பதால், உயர்ந்து வரும் அமெரிக்க டாலர் மதிப்பினால் அஸ்ட்ரோவின் செலவினங்கள் அதிகரித்து வருகின்றன.
இபிஎல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளின் ஏகபோக உரிமத்தைக் கொண்டிருக்கும் அஸ்ட்ரோவுக்கு இது எதிர்காலத்தில் பெரும் தலைவலியாக அமையலாம். அதன் வருமானமும் பாதிக்கப்படலாம். எதிர்வரும் 2022 வரையிலான இபிஎல் நேரலை ஒளிபரப்புகளின் உரிமங்களைத் தற்போது அஸ்ட்ரோ கொண்டிருக்கிறது.
இபிஎல் பார்க்க விரும்புபவர்கள் புதிய திட்டத்தின்வழி நெட்பிலிக்ஸ் போன்று மாதக் கட்டணமோ, ஆண்டுக் கட்டணமோ செலுத்தினால் அவரது இணையத் தளத்திற்கு அந்தப் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும். அதனை அவர் கணினி வழியாகவோ, கையடக்கக் கருவிகளின் வழியாகவோ, இல்லத் தொலைக்காட்சி வழியாகவோ பார்த்துக் கொள்ள முடியும். அஸ்ட்ரோவை இனி நாட வேண்டியதில்லை.
இந்தத் திட்டத்தை அமுல்படுத்திக் கொண்டு அதே வேளையில் தொலைக்காட்சி உரிமங்களின் வழி நேரலைகளாக இபிஎல் காற்பந்து போட்டிகளை இரசிகர்களுக்கு வழங்கும் நடைமுறையையும் இபிஎல் செயல்படுத்தலாம்.
ஒவ்வோர் ஆண்டும் தொலைக்காட்சி உரிமங்களின் வழி சுமார் 3.1 பில்லியன் பவுண்ட் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 16.74 பில்லியன்) வருமானத்தை இபிஎல் ஈட்டுகிறது. இதில் 1.4 பில்லியன் பவுண்ட் வருமானம் வெளிநாட்டு உரிமங்களின் மூலம் கிடைக்கிறது.
சிங்கப்பூரில் இபிஎல் உரிமத்தைக்கொண்டிருக்கும் சிங்டெல் நிறுவனம் 70 மில்லியன் பவுண்ட் கட்டணத்தை இபிஎல்லுக்குச் செலுத்துகிறது.
அஸ்ட்ரோ, இபிஎல் நிறுவனத்துக்கு உரிமத்துக்காக செலுத்தும் தொகையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.