Home 13வது பொதுத் தேர்தல் ம.இ.கா வேட்பாளர்கள் தேர்வு இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை

ம.இ.கா வேட்பாளர்கள் தேர்வு இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை

838
0
SHARE
Ad

டிசம்பர் 15 – ம.இ.கா போட்டியிடப்போகும் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய தற்போது ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தனது நேரத்தையும் கவனத்தையும் முழு மூச்சுடன் செலவிட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இறுதி நேரப் பட்டியல் இன்னும் தயாராகவில்லை என்றும் கடைசி நிமிடத்தில் பிரதமரின் தலையீட்டினால் மாற்றங்கள் நிகழலாம் என்றும் தெரிகின்றது.

யார் எந்த தொகுதியில் நிற்கலாம் என்ற ஆரூடங்கள் ஒரு புறம் பத்திரிக்கைகளில் அடிபட்டுக் கொண்டிருந்தாலும், பழனிவேலுவின் தேர்வுகள் இதுவரை ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பிரதமரிடம் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அந்த பட்டியலில் இறுதி நேர மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருப்பதாக ம.இ.கா வட்டாரங்கள் கூறுகின்றன.

காரணம் பொதுத் தேர்தலுக்கான தேதி தள்ளிக்கொண்டே போக பழனிவேலுவின் எண்ணங்களிலும் முடிவுகளிலும் சிறு சிறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறதாம். அதனால் வேட்பாளர் பட்டியல் கடைசி நேரத்தில் பல அதிரடி மாற்றங்களுக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

கேமரன் மலையில் பழனிவேலு உறுதி

யாருக்கு எங்கே சீட் என்ற கேள்விகளோடு எல்லாரும் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மற்றொரு கேள்வி பழனிவேலு எங்கே நிற்கப் போகிறார் என்பதுதான்! அதற்கும் ஏறத்தாழ முடிவு கண்டாகிவிட்டது.

அவர் ம.இ.காவுக்கு மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படும் கேமரன் மலையில் வேட்பாளராக நிற்பார் என்றும் அந்த தொகுதியின் தற்போதைய வேட்பாளர் தேவமணி சுங்கை சிப்புட் தொகுதியில் நிறுத்தப்படுவார்  என்பதும் ஏறத்தாழ உறுதியாகி விட்டது.

எப்போதும் கட்சியின் தேசியத் தலைவர்தான் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்வார். பிரதமரும் ஏற்றுக் கொள்வார். ஆனால் இந்த முறை தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளின் கருத்துக்களும் கவனமுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இதற்கிடையில் போலீசாரின் சிறப்பு உளவுப் பிரிவினரும் (ஸ்பெஷல் பிராஞ்ச்) ஒவ்வொரு வேட்பாளரின் அரசியல் பின்னணியையும் அவர்களின் வர்த்தகம், வங்கிக் கடன்கள் போன்ற தொடர்புகளையும் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது. அவர்களின் அறிக்கைகளின் அடிப்படையிலும் வேட்பாளர் தேர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.