ஏறத்தாழ ஆண்டுக்கொரு படம் மட்டுமே நடிக்கும் இந்தித் திரையுலகின் முன்னணிக் கதாநாயகன் அமீர்கான், தனது படங்களை மிகவும் கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்துக் கொடுப்பார்.
அவரது படங்கள் எல்லாம் இதுவரை இந்தியாவில் நூறுகோடி ரூபாய்களுக்கு மேல் வசூல் மழை பொழிந்துள்ளன. அந்த வகையில் அவரது நடிப்பில் வெளிவந்து தற்போது ஓடிக் கொண்டிருக்கும் தலாஷ் (தேடுதல்) படமும் நூறுகோடிக்கு மேல் வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
அதைவிட முக்கியம் என்னவென்றால் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக மிகவும் புத்திசாலித் தனமான, பரபரப்பான திருப்பங்களுடனான திரைக்கதையைக் கொண்டு வெளிவந்திருக்கும் படம் தலாஷ்.
குறிப்பாக நமது தமிழ்ப்பட நாயகர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இந்தியாவின் இன்றைய உச்ச நட்சத்திரமாக இருந்தும் அமீர்கான் ஒரு போலீஸ் இன்பெக்டராக சாதாரணமாக வந்து போகின்றார்.
கதாநாயகிகளுடன் கட்டித் தழுவல்கள் இல்லை. முதல் பாட்டில் கை, கால்களை தனித் தனியே காட்டி தத்துவ மழை பொழிந்து வெறுப்பேற்றும் “ஓபனிங்” பாடல் இல்லை. பத்துப் பேரை ஒற்றை ஆளாக இருந்து அடித்து வீழ்த்தும் சாகசத்தனங்கள் இல்லை. குத்துப் பாட்டு இல்லை. இவ்வளவுக்கு ஏன், அவரே பாடுவது போல ஒரு பாட்டு கூட இல்லை. படத்தில் வரும் ஓரிரு பாடல்கள் கூட பின்னணி பாடல்களாக ஒலிக்கின்றனவே தவிர, படத்தில் உள்ள எந்த கதாபாத்திரமும் பாடல் பாடுவது போல காட்சிகள் இல்லை. இருந்தும் படம் முழுமையும் தனது இயல்பான, யதார்த்தமான நடிப்பால் நம்மைக் கட்டிப் போட்டு விடுகின்றார் அமீர்கான்.
அவருக்கு நிகராக ஒத்துழைத்திருப்பது வலுவான திரைக்கதை. படத்தின் முதல் காட்சியில் நடக்கும் சாதாரணமான கார் விபத்து. சாலையிலிருந்து தடுமாறி கடலுக்குள் விழும் காருக்குள் ஒத்தையாக இருப்பதோ ஒரு பிரபல நடிகர். அந்த கார் விபத்தை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரிதான் அமீர்கான். அவர் விசாரணையைத் தொடர ஒன்றன் பின் ஒன்றாக தொடங்கும் மர்ம முடிச்சுகள், திருப்பங்கள் என போகின்ற திரைக்கதை இந்தியப் படவுலகைப் பொறுத்தவரை ஒரு புதுமைதான்.
கார் விபத்து நடந்த இடத்திற்கு பக்கத்தில் அமைந்துள்ள விபச்சார பகுதியும் அங்கு உலா வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் நம்மை ரசிக்க வைப்பதோடு, படத்தின் கதையோட்டத்திற்கும் மெருகேற்றுகின்றனர்.
இதற்கிடையில் அமீர்கானின் தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களையும் கதையோடு பொருத்தமான இணைத்து அவரது தந்தை பாசம், அவரது மனைவியாக வரும் ராணி முகர்ஜியின் தாய்ப்பாசம் என திரைக்கதையை முழுமை படுத்தியிருப்பது பட இயக்குநரின் திறமைக்கு சான்று.
ஒரு விபச்சாரப் பெண்ணாக வரும் கரீனா கபூர் துப்பறியும் அமீர்கானுக்கு பல தகவல்களைத் தந்து உதவி புரிவதோடு இறுதிக் கட்டத்தில் படத்தின் பல மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கும் உதவி புரிகின்றார்.
இந்திப் பட ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் தவிர்க்காமல் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம், தலாஷ்.
– இரா.முத்தரசன்