மும்பை – அகில இந்தியாவையே கலக்கி வரும், அமீர் கான் நடிப்பில் வெளிவந்துள்ள இந்திப் படமான ‘தங்கல்’ வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது. வெளியிடப்பட்ட முதல் மூன்று நாட்களில் 100 கோடியைத் தாண்டி வசூலித்துள்ள இந்தப் படம் இதற்கு முன் சாதனை புரிந்த சல்மான் கானின் ‘சுல்தான்’ படத்தின் வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது.
இதுவரையில் முதல் 3 நாட்களில் அதிகமாக வசூலித்த இந்தியப் படமாக சுல்தான் திகழ்ந்து வந்தது. இதுவும் மல்யுத்தம் பற்றிய கதைக்களமாகும்.
தங்கல் படம் பெண்குழந்தைகளின் பெருமைகளைப் பற்றிப் பேசுவதோடு, ஆண் பிள்ளைகளைக் கொண்டு பெற்றோர்கள் சாதிக்க நினைப்பதை பெண் பிள்ளைகளைக் கொண்டும் சாதிக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றது.
மகாவீர் சிங் பொகாட் என்ற உண்மையான மல்யுத்த வீரரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். நான்கு பெண் குழந்தைகளைப் பெற்ற அவர் தனது முதல் இரண்டு பெண் பிள்ளைகளையும் மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கி அனைத்துலக அரங்கில் இந்தியாவுக்காக மல்யுத்தப் போட்டிகளில் அவர்களைப் பங்கு பெறச் செய்து பல வெற்றிப் பதக்கங்களைப் பெற வைத்தார்.