சென்னை – நீண்ட கிறிஸ்மஸ் விடுமுறை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்று தமிழ்ப் படங்கள் வெளியீடு காண்கின்றன. இவற்றுடன் மோதுவதற்கு அமீர்கானின் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் தங்கல் படமும் ‘தங்கல் யுத்தம்’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாகின்றது.
விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, என நட்சத்திரப் பட்டாளத்துடன் இயக்குநர் சுராஜ் களமிறங்கும் படம் ‘கத்திச் சண்டை’. நகைச்சுவையில் கலக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் வடிவேலுவின் மறு-பிரவேசத்தால் மேலும் கூடுதலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
அண்மையக் காலமாக தனது படங்கள் எதுவும் சரியாகப் போகாத நிலையில் சசிகுமார் கோவை சரளாவுடன் நகைச்சுவையை முன்வைத்து வழங்கும் படம் ‘பலே வெள்ளையத் தேவா’. இதுவும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்.
மூன்றாவதாக களமிறங்கும் ‘மணல் கயிறு 2’ படமும் நகைச்சுவைப் படம்தான். விசுவின் மணக் கயிறு அந்தக் காலத்தில் முதலில் நாடகமாகவும், பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்து சக்கைப் போடு போட்டது.
அதன் இரண்டாவது பாகமாக மீண்டும் எஸ்.வி.சேகர், விசு நடிக்க வெளியாகின்றது ‘மணல் கயிறு 2’. இதில் எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் கதாநாயகனாக நடிக்கின்றார். ஷாம்னா காசிம் என்ற புதுமுகம் கதாநாயகியாக இணைகின்றார்.
கத்திச் சண்டை, பலே வெள்ளையத் தேவா, மணல் கயிறு 2 மூன்று படங்களும் இன்று ஒரே சமயத்தில் மலேசியாவிலும் வெளியிடப்படுகின்றன.
இந்தப் படங்களின் விமர்சனங்கள் செல்லியலில் வெளியாகும்.
அமீர்கானின் தங்கல்
அமீர்கான் மல்யுத்த வீரராகவும், இரண்டு பெண்குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருமாற்றும் தந்தையாகவும் நடித்திருக்கும் படம் தங்கல். இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் வெளியாகின்றது.
தமிழில், ‘தங்கல் யுத்தம்’ என்ற பெயரில் வெளியாவதால், மேற்குறிப்பிட்ட மூன்று தமிழ்ப் படங்களுக்கு இந்தப் படமும் கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மலேசியாவில் தங்கல் படத்தின் இந்திப் பதிப்பு மட்டும் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகின்றது. தமிழ்ப் பதிப்பு மலேசியாவில் வெளியிடப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை.