இந்திப் படவுலகின் முன்னணி நடிகர் அமீர்கான் தனது பாணியில், கடும் உழைப்பை வழங்கி – பெண்குழந்தைகளின் பெருமைகளையும், கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுகளிலும், இந்தியா அதிலும் குறிப்பாக பெண்கள் சாதிக்க வேண்டும், மிளிர வேண்டும் என்ற செய்தியோடும் வழங்கியிருக்கும் படம் ‘தங்கல்’.
இந்தியில் மல்யுத்த களம் என்பது படத் தலைப்பின் பொருள்.
மகாவீர் சிங் பொகாட் என்ற மல்யுத்த வீரரின் உண்மைக் கதையை திரைப்படத்துக்குத் தேவையான சுவாரசிய சம்பவங்களோடு உருவாக்கியிருக்கின்றார்கள்.
இவர்தான் உண்மையான மகாவீர் சிங் பொகாட் – தனது நான்கு பெண் குழந்தைகளுடன்…
பெண்குழந்தைகளும் ஆண்குழந்தைகளுக்கு நிகராக சாதிக்க முடியும் என்பதைப் படம் விவரிக்கின்றது. அதே வேளையில், மற்ற விளையாட்டுகள் மீது இந்தியாவின் அரசு அமைப்புகள் காட்டும் தாழ்வான மனப்பான்மை, பயிற்சியாளரின் ஆணவம், இந்திய விளையாட்டு அமைப்புகளில் புரையோடியிருக்கும் நிர்வாக ஆதிக்க மனப்பான்மை, பொறாமைகள் ஆகிய அம்சங்களையும் ஒரு பிடி பிடிக்கிறது ‘தங்கல்’.
கதை – திரைக்கதை
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் மல்யுத்தம் என்பது ஒரு கிராமத்து போட்டி விளையாட்டு. ஆனால், இதில் ஏனோ, மற்ற மேற்கத்திய நாடுகள் போன்று பெண்கள் அதிகமாக ஈடுபடுவதில்லை.
இளம் வயது மல்யுத்த வீரராக அமீர்கான்…
தேசிய மல்யுத்த வெற்றியாளராக வெற்றி பெற்றும், போதிய வாய்ப்புகள் கிடைக்காமலும், வருமானம் கிடைக்காமலும் தடுமாறும் மகாவீர் (அமீர்கான்) தந்தையின் நெருக்குதலால், தனது மல்யுத்தக் கனவுகளை மூட்டைக் கட்டி வைத்து விட்டு, ஓர் அலுவலகத்தில் வேலைக்கு சேர்கின்றார்.
ஆனாலும், இந்திய நாட்டுக்காக மல்யுத்தத்தில் பதக்கம் வாங்கும் தனது கனவை தனது மகன் ஒருநாள் சாதித்துக் காட்டுவான் என எதிர்பார்க்கின்றார். ஆனால், அவருக்கு வரிசையாக பிறக்கின்ற நான்கு பிள்ளைகளும் பெண் பிள்ளைகளாகப் பிறக்கின்றன. மீண்டும் அவரது கனவுகள் நொறுங்கிப் போகின்றன.
வயதான தந்தை வேடத்தில் அமீர்கான்….
ஒரு சம்பவத்தில் தனது முதல் இரண்டு பெண் பிள்ளைகள் ஓர் ஆண் பையனுடன் ஆக்ரோஷமாக சண்டை போடுவதைக் கண்டு, ஏன், ஆண் மகன்தான் தனது கனவுகளை பூர்த்தி செய்ய வேண்டுமா? ஒரு பெண்பிள்ளையாலும் அது முடியும் என்பதைக் காட்ட, செயலில் இறங்குகின்றார் அமீர்கான்.
அந்த முயற்சியில் அவர் சந்திக்கும் சவால்கள், எதிர்ப்புகள், அனைத்தையும் கடந்து, தனது மகள்களை தேசிய மல்யுத்த வீராங்கனைகளாக அவர் மாற்றிக் காட்டுவதும், அந்த மகள்கள் இந்திய நாட்டுக்காக தங்கப் பதக்கம் பெற்று தந்தைக்குப் பெருமை சேர்ப்பதும்தான் படத்தின் கதை.
படத்தின் பலம்: அமீர்கான்…அமீர்கான்…அமீர்கான்….
இந்தியத் திரையுலகில் முழுமைவாதி (Perfectionist) எனப் பெயர் எடுத்தவர் அமீர்கான். எதையும் மிகச் சரியாக, முழுமையாக செய்ய வேண்டும் எனப் பாடுபடுபவர்.
தனது இரண்டு மகள்களையும் மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கிய மகாவீர் பொகாட்டுடனும் அவரது மகள்களுடனும் அமீர்கான்….
தனது 50-வது வயதிலும், ஓர் இளம் வயது மல்யுத்த பயில்வானாக, கட்டுமஸ்தான உடலுடன் மாறிக் காட்சியளிக்கிறார் அமீர்கான். தொடக்கக் காட்சிகளில், அசல் மல்யுத்த பாணியில் தரையில் உருண்டு புரளும் அமீர், பின்னர் தனது கனவுகள் நொறுங்கிப் போக, தொப்பையுடன் நடுத்தர வயது தந்தையாக உருமாறுகின்றார்.
தந்தையின் பாசத்தைக் காட்டும் அதே நேரத்தில், தனது பிள்ளைகளாக இருந்தாலும், பாரபட்சமின்றி கடும் விதிகளைப் பின்பற்றும் பயிற்சியாளராக அவர்களை மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றுவதற்குப் பாடுபடுகின்றார்.
இப்படியாக படம் முழுக்க நடிப்பில் படம் முழுக்க ஆக்கிரமித்திருப்பவர் அமீர். தனது சிறுவயது மகள்கள் போட்டிகளில், ஆண்களோடு சரிசமமாகப் போட்டியிட மறுக்கப்படும்போது காட்டும் ஆத்திரம், வளர்ந்த மூத்த மகள் தன்னை விட்டுப் பயிற்சிக்காக பிரியும்போது வெளிப்படுத்தும் சோகம், பின்னர் அதே மகள் தனக்கு எதிராகத் திரும்பும்போது காட்டும் உணர்ச்சிகள், மகள் தோல்வியடையும்போது குமுறுவது, பின்னர் வீராவேசத்துடன் இரவு பகல் பாராமல் பயிற்சியளிப்பது என நடிப்பில் பல பரிமாணங்களைத் தொடுகின்றார் அமீர்.
இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தாலும் இந்தப் படத்தின் மூலம் அவருக்குக் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
படத்தின் குறைகள் – பலவீனங்கள்
முதல் பாதியில் இயல்பான வட இந்தியக் கிராமம் ஒன்றின் உள்ளூர் அம்சங்களுடன் பயணிக்கும் திரைக்கதையில் கதைக் களங்கள் புதிதாகவும், இதுவரை பார்க்காத இந்திப் படத்தையும் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.
ஆனால், இடைவேளைக்குப் பின்னர் அமீர்கானின் மகள் தேசியப் போட்டிகளுக்கான பயிற்சிகளில் இறங்கும்போதும், அனைத்துலகப் போட்டிகளில் மோதும் போதும் வழக்கமாக ஏற்கனவே பல விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்களில் பார்த்த அதே கதைசயம்சம் வந்து அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை நமக்குக் காட்டிவிடுகின்றது.
அமீர்கானைச் சுற்றியே படத்தின் மொத்த கதையும் சுழல்வதும், மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லாததும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் சோர்வைத் தருகின்றது. மற்ற வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததும் ஒரு சராசரி இரசிகனுக்கு ஒரு குறையாகவே படும்.
அவரே ஒரு தேசிய அளவிலான மல்யுத்த வெற்றியாளராக இருந்தும், அமீர்கான், மகளின் பயிற்சிகளில் தலையிடுவதும், கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனமாகவே படுகின்றது.
இருப்பினும், இன்னொரு கோணத்தில் பார்த்தால், இதுபோன்ற சமசரசங்கள் எதுவும் செய்து கொள்ளாத அணுகுமுறையும், கொண்ட இலக்கிலிருந்து பிறழாத திரைக்கதையும்தான் இந்தப் படத்தை மற்ற படங்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றது.
விளையாட்டுத் துறை பெண்களுக்கு ஊக்கமூட்டும் படம்
படம் முடிந்து வெளிவரும்போது பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் மட்டுமல்ல, பெண்களும் தலைநிமிர்ந்து நிற்கின்றார்கள்.
பெற்றோர்கள் தாங்கள் சாதிக்க நினைப்பதை பெண் பிள்ளைகளைக் கொண்டும் நிறைவேற்றலாம் என்பதை உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் காட்டியிருப்பது படம் பார்ப்பவர்களுக்கும், இளம் பெண்களுக்கும் ஆழப் பதியும் வண்ணம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்திப் பட இரசிகர்கள் இந்தப் படம் பார்க்கும்போது, தங்கள் வீட்டின் இளம் பெண்களையும் அழைத்துச் சென்றுக் காட்டுங்கள்.
யார் கண்டது? அந்த இளம் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகளையும் – ஏன் வாழ்க்கையையுமே – திசைமாற்றிய தருணமாக இந்த ‘தங்கல்’ படம் அமையலாம்.
-இரா.முத்தரசன்