சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த சோகமான சம்பவத்தை அடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பெரிய அளவிலான பளுதூக்கி ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், தாம் சிறுவயதிலிருந்தே சினிமாவில் வளர்ந்தவன் என்றும், இது தம் குடும்பம், தமது குடும்பத்தில் இந்த மூன்று பேரும் மரணம் அடைந்திருப்பது வருத்தமளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும், தாம் நூலிழையில் உயிர் பிழைத்ததை அவர் தெரிவித்தார். விபத்து நடப்பதற்கு நான்கு நொடிகளுக்கு முன்புவரை அவர் அவ்விடத்தில் இருந்ததாகக் கூறினார்.
“பல கோடி வருமானம் ஈட்டுபவர்கள் என சினிமாத்துறையினர் என்று மார்தட்டிக்கொண்டாலும், ஒரு கடைநிலை சினிமா ஊழியரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்பது தனிப்பட்ட வகையில் எனக்கு அவமானமாக இருக்கிறது.” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
திரைத்துறையில் இனிமேல் இம்மாதிரியான விபத்துகளில் கடைநிலை ஊழியர்கள் மரணமடையாமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக பளுதூக்கியை இயக்கிய ராஜன் எனும் நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக காவல் துறை லைகா நிறுவனம் உட்பட மேலும் நால்வர் மீது வழக்குத் தொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.