Home One Line P2 திரைவிமர்சனம் : “மாஃபியா” – அருண் விஜய், பிரசன்னாவின் பரபரப்பான ஆடு-புலி ஆட்டம்

திரைவிமர்சனம் : “மாஃபியா” – அருண் விஜய், பிரசன்னாவின் பரபரப்பான ஆடு-புலி ஆட்டம்

343
0
SHARE

“துருவங்கள் பதினாறு” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர் கார்த்திக் நரேன் இயக்கிய இரண்டாவது படமான “நரகாசூரன்” திரையீட்டுச் சிக்கல்களால் முடங்கிக் கிடக்கும் நிலையில், அவரது மூன்றாவது படமான “மாஃபியா” முதலில் வெளிவந்துள்ளது.

சுமார் 2 மணி நேரமே ஓடக் கூடிய “மாஃபியா” படம் முடிந்து வெளியே வரும்போது “இந்தப் படம் நன்றாக இருந்ததா இல்லையா” என்ற குழப்பம் கண்டிப்பாக உங்களுக்கு வரும். அந்த அளவுக்கு முதல் பாதியில் படத்தை இழுவையாகவும், எந்தவித சுவாரசியமும் இல்லாமல் எடுத்திருக்கும் கார்த்திக் நரேன் இரண்டாவது பாதியில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.

இடைவேளைக்குப் பின்னர் போதைப் பொருள் காவல் துறை அதிகாரியாக வரும் அருண் விஜய்க்கும், வில்லனாக வரும் பிரசன்னாவுக்கும் இடையில் காட்டில் உலவும் சிங்கம்-நரி உவமானங்களோடு நடக்கும் ஆடு-புலி ஆட்டத்தின் மூலம் தனது புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இறுதியில் படம் முடிந்த பிறகு வைக்கப்படும் அபாரமான திருப்பம், நம்மால் கொஞ்சம்கூட ஊகிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதோடு, படத்தின் இரண்டாவது பாகத்திற்கும் அச்சாரம் போடுகிறது. இந்த இடத்திலும் இயக்குநர் தனது திறமையால் உயர்ந்து நிற்கிறார்.

எல்லாக் காட்சிகளையும் “ஸ்லோ மோஷன்” எனப்படும் மெதுவோட்டப் பாணியில் எடுத்திருப்பது சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. நடக்கிற காலடித் தடங்கள், காரிலிருந்து கதாபாத்திரங்கள் இறங்குவது, நடப்பது, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்போது தெறித்து விழும் துப்பாக்கி இரவைகள் விழுவது இப்படி எல்லாமே மெதுவோட்டமாக எடுத்திருப்பது என்ன இயக்கமோ, படமாக்கும் திறமையோ தெரியவில்லை. சரியான போரடிப்பு.

கதை – திரைக்கதை

படத்தின் தொடக்கத்தில் போதைப் பொருள் எப்படிக் கடத்தப்படுகிறது, என்ன மாதிரியான கடத்தல்காரர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் விலாவாரியாகக் காட்டப்படுகிறது. எத்தனையோ படங்களில் பார்த்து விட்ட இத்தகையக் காட்சிகள் விளக்கத்தோடு காட்டப்படுவது சரியான இழுவை.

இதற்கெல்லாம் உச்சத் தலைவராக இருந்து இயக்குபவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என காவல்துறை இறங்கும்போது அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்க, அதைக் கண்டுபிடிக்க அலையும் அருண் விஜய்க்கு ஏற்படும் பிரச்சனைகள், வெளிச்சத்திலிருந்து வெளியே வரும் வில்லன் பிரசன்னா அருண் விஜய்க்கு கொடுக்கும் குடைச்சல்கள், நெருக்கடிகள், அதைச் சமாளிக்க திட்டம் தீட்டும் அருண் விஜய்யின் வியூகம் – இப்படியாகச் செல்கிறது திரைக்கதை.

அருண் விஜய்யின் குடும்பத்தினரைக் கடத்தி வைத்துக் கொண்டு பிரசன்னா அருண் விஜய்யை அலைய விடுவதும் அதற்குப் பதிலடியாக அருண் விஜய் புத்திசாலித்தனமாக செயல்படுவதும் பரபரப்பான நிமிடங்கள்.

இறுதியில் பிரசன்னா வெளியிடும் சில அதிரடித் தகவல்களோடும், இறுதிக்கட்டத் திருப்பக் காட்சிகளும் படத்தை உயர்த்திப் பிடிக்கின்றன. அவை என்ன என்பதை வெளியே சொல்லிவிட்டால் சுவாரசியம் போய்விடும்.

படத்தின் சிறப்பம்சங்கள்

ஆரியன் கதாபாத்திரத்தில் காவல் அதிகாரிக்கே உரிய மிடுக்கோடும், கம்பீரத்தோடும் அருண் விஜய் நடித்திருந்தாலும், படத்தைத் தூக்கி நிறுத்துவது வில்லன் திவாகராக வரும் பிரசன்னாதான். ஏற்கனவே இதுபோன்ற கதாபாத்திரங்களில் பிரசன்னா நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் பகட்டான ஆடைகளோடு ஸ்டைலாக பேசுவதோடு, கண்களில் குரூரத்தையும், வில்லத்தனத்தையும் தேக்கி வைத்து நடித்திருக்கிறார்.

படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு சென்று 2 மணி நேரத்திற்குள்ளாக முடிப்பதால், கதைக்குத் தேவையற்ற காட்சிகளோ, பாடல் காட்சிகளோ இல்லாதது படத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பு. காதல் காட்சிகளும் இல்லை. ஓரிரு காட்சிகளில் அருண் விஜய்யும் பிரியா பவானி சங்கரும் கைகோர்த்து காதலர்கள் போல் நடப்பதோடு சரி.

படத்தின் ஒளிப்பதிவை கோகுல் பெனோய் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். இரவு நேரக் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும், கவரும் வகையில் படமாக்கப்பட்டிருக்கின்றன.

படத்தின் பலவீனங்கள்

படப்பிடிப்பின்போது பிரசன்னா, இயக்குநர் கார்த்திக் நரேன், அருண் விஜய், பிரியா பவானி சங்கர்

ஆரம்பம் முதலே காவல் துறை உயர் அதிகாரியான அருண் விஜய் தாடியுடனும், ஸ்டைலான சிகை அலங்காரத்துடன் வருவது நெருடல்.

அவருக்கு உதவியாளராக வரும் பெண் காவல் அதிகாரி பிரியா பவானி சங்கருக்கு, அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற கட்டுமஸ்தான உடல்வாகு. ஆனாலும், முதலாம் வகுப்பு மாணவி போல் அருண் விஜய்யிடம் ஒவ்வொரு சம்பவத்திற்கும், விஷயத்திற்கும் விளக்கம் கேட்பது சில சமயங்களில் நகைச்சுவைத் தனமாக இருக்கிறது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி படம் முழுக்க மெதுவோட்டப் பாணியில் படமாக்கப்பட்டிருப்பது படத்திற்குப் பெரும் பின்னடைவைத் தருகிறது.

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக வெளிவராமல் இருக்கும் பிரசன்னா ஒரு கட்டத்தில் சர்வ சாதாரணமாக வெளியே வருவதும், அத்தனைக் கையாட்கள் இருக்கத் தானே கொலைகள் செய்வதும் நம்ப முடியாத கதையமைப்பு.

அதே போல உயர்தர ஐந்து நட்சத்திர விடுதியில் இருந்து இயங்கும் அவர் தனக்குத் துணையாக சாதாரண, வடசென்னை பாணி லோக்கல் ரக ரவுடிகளைத் துணையாக வைத்திருப்பதும் சிரிப்பை வரவழைக்கிறது.

சில காட்சிகள் “கைதி” திரைப்படத்தை நினைவுபடுத்துவதுபோல் அமைந்திருக்கின்றன.

இப்படியாக சில குறைகளை நிவர்த்தி செய்து, இரண்டாம் பாதியில் செலுத்திய கவனத்தை, முதல் பகுதித் திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால், படம் இன்னும் சிறப்பானதாக அமைந்திருக்கும்.

-இரா.முத்தரசன்

Comments