கோலாலம்பூர்: கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் மக்களின் வாக்குகளுக்குப் பின்னர் தேசிய முன்னணி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டப் பின்னர், ஒரு புதிய விடியலை எதிர்பார்த்த பல மலேசியர்களின் உணர்வுகளுக்கு துரோகம் இழைத்ததாக நேற்றைய அரசியல் சம்பவம் அமைகிறது என்று பிஎஸ்எம் கட்சியின் துணத் தலைவர் எஸ். அருட்செல்வன் தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியை அடைந்தவர்களும் நம்பிக்கைக் கூட்டணியின் சில கட்சிகளும் இணைந்து 20 மாதங்களுக்கு முன்பு பெற்ற மக்கள் வாக்குகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கான நம்பிக்கையைப் பறிக்க நியாயமற்ற அரசாங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன என்று அவர் கூறினார்.
“ஆட்சியில் அமர்வதற்கே இந்த துரோகச் செயல் நடந்துள்ளது. இந்த உயரடுக்கு அணுகுமுறை விமர்சிக்கப்பட வேண்டும், மேலும் இந்த மாற்றத்தைத் திட்டமிடுபவர்கள் நிராகரிக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட வேண்டும். வாக்குகளின் அடிப்படையில் அவர்கள் மாறங்களை விரும்பவில்லை, மாறாக, ஓர் ஆடம்பர தங்கும்விடுதியில் ஒப்பனைக்கான சந்தித்துள்ளனர்.”
“இந்த சதிச் செயலில் தொடர்புடைய அனைத்து தரப்பின் நடவடிக்கைகளையும் பிஎஸ்எம் மறுக்கிறது. மாற்றத்தைத் தேடுவதில் குறுக்குவழிகளை எடுக்க சமூகத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தாலும், துன் மகாதீரின் ஈடுபாட்டைக் கேள்விக்குட்படுத்தும் மக்கள் பிரகடனத்திலிருந்து நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இன்று, எங்கள் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது.” என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.
மக்களை தங்கள் அரசியல் கூட்டணிகளாகக் கருதி, ஜனநாயக இடத்தைப் பாதுகாக்க மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புமாறு தாங்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு வலியுறுத்தியதாகஅ அவர் கூறினார்.
“நம்பிக்கைக் கூட்டணி துரதிர்ஷ்டவசமாக தேசிய முன்னணியின் அதிகாரத்தை பின்பற்றவும், புதிய தாராளமய முதலாளித்துவக் கொள்கைகளை மட்டுமே விரும்பியது. மேலும், அதன் சொந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தயாராக இல்லை. தேசிய முன்னணியிலிருந்து பெறப்பட்ட இன அடிப்படையிலான அரசியலில் நம்பிக்கைக் கூட்டணியும் பிடித்துக் கொண்டது. அநேகமாக அன்வார், கிட் சியாங் அல்லது மாட் சாபு ஆகியோரை ஆதரிக்க மக்கள் இந்த முறை வெளியே வர மாட்டார்கள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிஎஸ்எம் பின்புறமாக ஓர் அரசாங்கத்தை அமைக்க நிராகரிப்பதாகவும், மக்களுக்கு மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்குவதன் மூலமே இது நியாயமாகக் கையாளப்பட்டு என்று எண்ண இயலும் என்று தெரிவித்தது.
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உண்மையான முகத்தை இப்போது காண முடிகிறது. கொள்கை ரீதியான அரசியல், ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை, ஊழல் மற்றும் உயரடுக்கின் அரசியலுக்கு எதிரான ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்க பிஎஸ்எம் அழைப்பு விடுக்கிறது” என்று அவர் மேலும் கூறினார். .