Home One Line P1 பேராக், மலாக்கா சட்டமன்றங்களில் நம்பிக்கைக் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது

பேராக், மலாக்கா சட்டமன்றங்களில் நம்பிக்கைக் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது

587
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி செய்து வரும் இரண்டு மாநிலங்களில் அது பெரும்பான்மையை இழந்துள்ளது.

அவ்வாறு மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் – அகமட் பைசால் அசுமு (படம்) தலைமையிலான, பேராக் மாநிலத்தின் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழலாம்.

அதற்குக் காரணம், பேராக் மாநிலத்தில் இரண்டே சட்டமன்றத் தொகுதிகளின் பெரும்பான்மையில்தான் நடப்பு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஆட்சி செலுத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

மொத்தமுள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளில் கட்சிகளின் பிரதிநிதித்துவம் பின்வருமாறு:

நம்பிக்கைக் கூட்டணி – 30 சட்டமன்றத் தொகுதிகள்

ஜசெக – 18

அமானா – 6

பிகேஆர் – 4

பெர்சாத்து – 2

மொத்தம் – 30 சட்டமன்றத் தொகுதிகள்

தேசிய முன்னணி – பாஸ் கூட்டணி

அம்னோ – 25 சட்டமன்றத் தொகுதிகள்

பாஸ் – 3 சட்டமன்றத் தொகுதிகள்

இந்நிலையில் பெர்சாத்து நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து விலகியுள்ளதால் அதன் பலம் தற்போது 28 ஆகக் குறைந்துள்ளது. இதற்கிடையில் பெர்சாத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை தேசிய முன்னணி – பாஸ் கட்சியினருக்கு வழங்கினால் அந்தக் கூட்டணியின் பலம் 30 ஆக உயர்ந்து விடும்.

மலாக்கா மாநில சட்டமன்றம்

அதே வேளையில் மலாக்கா மாநிலத்திலும் நம்பிக்கைக் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளதாக முதலமைச்சர் அட்லி சஹாரி கோடி காட்டியுள்ளார்.

இதனை மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினரும் மலாக்கா ஜசெக தலைவருமான தே கோக் கியூ உறுதிப்படுத்தியுள்ளார்.

28 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மலாக்கா மாநிலத்தில் அம்னோ தனியாக 13 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஜசெக 8 தொகுதிகளையும், பிகேஆர் 3 தொகுதிகளையும், அமானா 2  தொகுதிகளையும் பெர்சாத்து 2 தொகுதிகளையும் கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் நம்பிக்கைக் கூட்டணி 15 தொகுதிகளைக் கொண்டு, 2 தொகுதிகள் பெரும்பான்மையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

தற்போது பெர்சாத்து நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளதால், அதன் பலம் 13 ஆகக் குறைந்திருக்கிறது. எனினும் பெர்சாத்து கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணியின் மாநில அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்களா அல்லது அம்னோ-தேசிய முன்னணி பக்கம் சாய்வார்களா என்பது இதுவரையில் தெரியவில்லை.

அப்படி அவர்கள் அம்னோ பக்கம் சாய்ந்தால், மலாக்கா மாநிலத்தை ஆளும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் எந்நேரத்திலும் கவிழலாம்.