புது டில்லி: சமூகப் பக்கங்களில் அதிகம் வலம் வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடகங்களை விட்டு விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக நேற்று திங்கட்கிழ்மை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகியவற்றிலிருந்து தனது கணக்குகளை அகற்ற எண்ணம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சிந்தனையைத் தூண்டியது குறித்து மேலதிக விவரங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.
பல ஆண்டுகளாக பல சமூக ஊடக தளங்களில் அதிகம் பின்பற்றப்பட்ட இந்தியராக மோடி இருந்து வருகிறார்.
மே 2019-இல், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் முழுவதும் கிட்டத்தட்ட 111 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட சமூக ஊடக தளங்களில் உலகளவில் அதிகம் பின்பற்றப்பட்ட இரண்டாவது அரசியல்வாதியாக மோடி திகழ்ந்தார்.
நேற்று திங்கட்கிழமை (மார்ச் 2) இரவு 9:45 மணி நிலவரப்படி (இந்திய நேரம்) , மோடிக்கு டுவிட்டரில் 53 மில்லியனுக்கும் அதிகமானோரும், பேஸ்புக்கில் 44 மில்லியனுக்கும் அதிகமானோரும் பின்தொடர்கின்றனர். மேலும், இன்ஸ்டாகிராமில் 35 மில்லியனுக்கும் அதிகமான பேர் பின்தொடர்கிறார்கள்.