கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தனது அமைச்சரவையை நியமிப்பதில் முன் நிபந்தனைகளுடன் செயல்படக்கூடாது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா கூறினார்.
“பிரதமருக்கு முன் நிபந்தனைகளை வைப்பதற்கு சமமான எதையும் நாம் சொல்லக்கூடாது.”
“தனது அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க அவருக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.” என்று கோலாலம்பூரில் உள்ள அம்னோ தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அனுவார் கூறினார்.
அமைச்சரவையில் உயர்மட்ட அரசாங்கக் கட்சித் தலைவர்களை நியமிக்கும் பாரம்பரியத்தை பிரதமர் பின்பற்ற வேண்டுமா என்று கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
மொகிதினுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அம்னோ பல நிபந்தனைகளை விதித்ததாக ஊகங்கள் பரவலாக உள்ளன.
அம்னோ தலைவர்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணைகள் கைவிடப்பட வேண்டும் என்பதும் இதில் அடங்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதனை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி மறுத்துள்ளார்.
மேலும், சாஹிட் போன்ற தலைவர்களை அமைச்சரவையில் நியமிக்க அம்னோ மொகிதினுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் ஊகங்கள் உள்ளன.
இதற்கிடையில், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தைப் போலில்லாமல், மொகிதினின் தேர்வு பலவிதமான திறமைகள் கொண்ட தலைவர்களை உள்ளடக்கியிருக்கும் என்று அனுவார் கூறினார்.
“பிரதமருக்கு நன்றாகத் தெரியும் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விகளை அவர் மீண்டும் செய்ய விரும்பவில்லை. அந்த தோல்விகளின் தாக்கம் மக்களுக்கு அதிக துன்பத்தை உருவாக்கியது.”
“அவர் சீர்திருத்தங்களைத் தொடருவார். பொருளாதாரத்தை மேம்படுத்துவார், வேலைகளை உருவாக்குவார், மக்களை மகிழ்ச்சியடையச் செய்வார், சுகாதாரம், வாழ்க்கைச் செலவு தொடர்பான பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவார் என்று நான் நம்புகிறேன்.”
“அவர் மிகவும் வலுவான, மிகவும் அனுபவம் வாய்ந்த அமைச்சரவையைக் கொண்டிருப்பார். சிறிது காலம் பொறுத்திருங்கள், ஒன்று அல்லது இரண்டு வாரங்கள்” என்று அவர் கூறினார்.