கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டுடன் கலந்தாலோசித்த பின்னர் நான்கு சிலாங்கூர் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நேற்று வியாழக்கிழமை அறிவித்தனர்.
குவாங் சட்டமன்ற உறுப்பினர் சல்லேஹுதடின் அமிருடின், ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் சாயிட் ரொஸ்லி, மற்றும் பாதாங் காளி சட்டமன்ற உறுப்பினர் ஹாருமினி உமர் கலந்து கொண்ட சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலைப்பாட்டை எடுத்த மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் அடிப் சியான் அப்துல்லா (டெங்கில்).
14-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்து சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் ஐந்து இடங்களை வென்றது.
மத்திய மட்டத்தில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐந்து பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சிலாங்கூர் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
“மாநில அரசாங்கத்துடனான எங்கள் விசுவாசத்தை அல்லது ஒத்துழைப்பை மதிப்பீடு செய்வது சிலாங்கூர் நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைதான்” என்று முகமட் சாயிட் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதற்கிடையில், அவர்களின் நிலைப்பாடு மற்றும் மாநில அரசாங்கத்துடன் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவர்கள் அநேகமாக இன்று வெள்ளிக்கிழமை அமிருடினுடன் சந்திப்பார்கள் என்று சல்லேஹுடின் கூறினார்.