கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட்டை மீண்டும் பிரதமராக நிறுத்துவதற்காக கடந்த வாரம் நடைபெற்ற பதினொரு மணி நேர பேச்சுவார்த்தையின் போது நிதி அமைச்சர் பதவியினை ஜசெகவின் லிம் குவான் எங் விட்டுக் கொடுக்க முன்வந்ததாக ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட் கூறினார்.
புதிய அமைச்சரவையில் குறைவான அமைச்சர்களைக் கொண்டிருப்பதற்கு ஜசெக தயாராக இருப்பதாக ஜசெக பொதுச்செயலாளருமான அவர் கூறியதாக காலிட் கூறினார்.
” பரவாயில்லை துன் (மகாதீர்), எங்களால் மலாய்க்காரர்கள் நம்பிக்கைக் கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், ஜசெக அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதை ஏற்றுக்கொள்கிறோம்” என்று லிம் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.
” மலாய்க்காரர்களால் லிம் குவான் எங்கை நிதி அமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், நான் நிதி அமைச்சராக இல்லையென்றால் பரவாயில்லை” என்று அவர் கூறியதை சினார் ஹரியான் பதிவிட்டதை அவர் மேற்கோளிட்டார்.
பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின் எட்டாவது பிரதமராக நியமிக்கப்படுவதைத் தடுக்க கடைசி நிமிட முயற்சியில் மகாதீருக்கும் நம்பிக்கைக் கூட்டணிக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படும் பேச்சுவார்த்தைகள் குறித்து காலிட் கருத்துத் தெரிவித்தார்.