Home One Line P2 திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார் – இன்று இறுதிச் சடங்குகள்

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார் – இன்று இறுதிச் சடங்குகள்

771
0
SHARE
Ad

சென்னை – (கூடுதல் தகவல்களுடன்) திமுக பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், உடல்நலக் குறைவினாலும், முதுமையினாலும் தனது 98-வது வயதில் இன்று அதிகாலையில் காலமானார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்று, இன்று மாலையில் சென்னையில் அவரது நல்லுடல் தகனம் செய்யப்படும்.

திராவிடப் பாரம்பரியத்தில் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டவர் அன்பழகன். திமுகவைத் தோற்றுவித்த ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான அன்பழகன் பெரியார் வழியில் இறுதிவரை அரசியல் பயணம் நடத்தியவர்.

#TamilSchoolmychoice

தன்னை விட இளவயது கொண்ட கருணாநிதியின் தலைமையை ஏற்றுக் கொண்ட அன்பழகன் தனது இறுதி மூச்சு வரை திமுகவின் தடம் மாறாத தளபதியாக, கட்சி எத்தனையோ போராட்டங்களையும், பிளவுகளையும் சந்தித்தபோதும், திமுகவின் கட்சிப் பிணைப்போடும், கருணாநிதியின் தலைமைத்துவத்தோடும் தன்னை இணைத்துக் கொண்டவர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 6 மாதங்கள் சிறைவாசம் சென்ற தமிழ்மொழிப் போராட்டவாதி. நிறைய நூல்களை எழுதியிருக்கும் அன்பழகன், மேடைப் பேச்சில் வல்லவர். அண்ணாவின் பாராட்டையே மேடைப்பேச்சுக்காக பெற்ற அன்பழகன்,  சட்டப் பேரவைக்கு 9 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, பலமுறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

கருணாநிதிக்கு விசுவாசமாக இறுதி வரை அன்பழகன் எப்படி இருந்தாரோ அதே போல, அன்பழகனுக்கு உரிய மரியாதையையும் கருணாநிதி எல்லாக் காலங்களிலும் வழங்கி வந்தார்.

எப்போதும் “பேராசிரியர்” என மரியாதையுடனே அன்பழகனை அழைத்த கருணாநிதி, எல்லா மேடைகளிலும் அவருக்கு முன்னுரிமை அளித்ததோடு, எல்லா கட்சி முடிவுகளையும் அன்பழகனின் அனுமதியோடும், அவரது இணக்கத்தோடும்தான் எடுத்தார்.

கட்சி அறிக்கைகளும் எப்போதும் அன்பழகனின் பெயரைத் தாங்கியே வெளிவரும்.

1972-இல் எம்ஜிஆரின் வெளியேற்றம், பின்னர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் போன்ற வேறு சில தலைவர்கள் வெளியேறி எம்ஜிஆரோடு இணைந்தது, 1990-ஆம் ஆண்டுகளில் வைகோவின் வெளியேற்றம் – இப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் திமுக சோதனைகளைச் சந்தித்தபோதும், நிலைகுலையாமல் கருணாநிதிக்கு பக்கத் துணையாக நின்றவர் அன்பழகன்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.பட்டம் பெற்ற அன்பழகன் பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து பேராசிரியர் என அன்புடன் அழைக்கப்பட்ட அன்பழகன் இறுதி வரை திமுக கட்சிக்காரர்களாலும், மற்றவர்களாலும், “பேராசிரியர்” என்ற அடைமொழியுடனே அழைக்கப்பட்டார்.

திருவாரூர் காட்டூரைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்பழகனின் இயற்பெயர் இராமையா ஆகும். அவரது தந்தையார் பெயர் கல்யாணசுந்தரம்.  அவரது தந்தையாரும் திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டவராவார்.

திராவிடப் பாரம்பரியத்தில் அந்தக் காலத்தில் பலரும் தூய தமிழ்ப் பெயர்களைச் சூடிக் கொள்ள, இராமையாவும் அன்பழகன் ஆனார்.

-செல்லியல் தொகுப்பு