Home One Line P1 “மகளிர் சமுதாயத்தின் தியாகங்களைப் போற்றி நினைவு கூர்வோம்” – உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில்...

“மகளிர் சமுதாயத்தின் தியாகங்களைப் போற்றி நினைவு கூர்வோம்” – உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன்

736
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மனித குலம் இந்த உலகத்தில் தழைத்தோங்க, எண்ணற்ற தியாகங்களையும், உழைப்பையும் வழங்கியிருக்கும் மகளிர் சமுதாயத்தின் பங்களிப்பைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குறிப்பாக மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தியின் தெரிவித்துள்ளார்.

“நமது வாழ்க்கையில் பெண்களில் பங்கையும், தியாகத்தையும் நான் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. நமக்கு தாயாராக, சகோதரியாக வாழ்க்கையில் இணையும் பெண்கள் பின்னர் மனைவியாக நமது வாழ்க்கையை செழிக்கவும் சிறப்பிக்கவும் செய்கின்றனர். அதைத் தொடர்ந்து நமக்கு மகள்களாக, பேத்திகளாக நமது வாழ்க்கையின் அடுத்த கட்டப் பக்கங்களை ஒளிரச் செய்வதும், உற்சாகம் ஊட்டுவதும் பெண்கள்தான்” என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு சரிசம வாய்ப்பு

“நமது நாட்டைப் பொறுத்தவரை எல்லா அம்சங்களிலும் பெண்களுக்கு சரிசமமாக பதவிகளும் கௌரவங்களும் கொடுக்கப்படுகின்றன. பெண்கள் என்பதற்காக யாரையும் எந்தப் பதவியிலும் நமது நாட்டு அரசாங்கம் எந்தக் காலத்திலும் நிராகரித்ததில்லை. அதன் காரணமாகத்தான், நமது நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், நீதிபதிகளாகவும், தூதர்களாகவும், உயர் அரசாங்கப் பதவி வகிப்பவர்களாகவும் எல்லா இனப் பெண்களுக்கும் வாய்ப்பளிக்கப் பட்டிருக்கிறது. அண்மையில் கூட நமது நாட்டு இராணுவத்தில் இந்தியப் பெண்மணி ஒருவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது” என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

நமது இந்தியக் குடும்பங்களிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உட்பட எல்லாவித வாய்ப்புகளையும் சரிசமமாக வழங்கும் போக்கு நமது பெற்றோர்களிடையே காணப்படுகிறத என்றும் இந்த நல்ல நடைமுறை எப்போதும் தொடர வேண்டும் என்றும் பெண்களுக்கு எல்லாக் காலங்களிலும் கல்வியில் முன்னுரிமையைப் பெற்றோர்கள் வழங்கி வரவேண்டும் என்றும் விக்னேஸ்வரன் மேலும் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

“கல்வியின் வழி முன்னேறும் பெண்கள் எல்லாத் துறைகளிலும் சிறக்க முடியும் என்பதைத்தான் கடந்த கால வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. அதே வேளையில் நமது குழந்தைகள் சமூக சீர்கேடுகளில் சிக்கிக் கொள்ளாமல் அவர்களைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய கடமையும் பெண்களுக்கு இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்தி அந்தப் பணியையும் அவர்கள் செவ்வனவே ஆற்றிவர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” எனவும் விக்னேஸ்வரன் கூறினார்.

மஇகாவிலும் பெண்களுக்கு முக்கியத்துவம்

“அரசியலிலும் பெண்களுக்கு சரிசம உரிமைகளும், முக்கியத்துவமும் வழங்கப்படுவது எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. பெண்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டும் பார்க்காமல், மஇகாவின் அரசியல் பயணத்தில் உடன் வரும் ஒரு பகுதியாக மஇகா தலைமைத்துவம் எப்போதும் பெண்களுக்கு முக்கியத்துவம் தந்து வந்திருக்கிறது. மகளிர் பகுதி, மஇகா புத்ரி என்று மட்டும் இல்லாமல், மஇகாவின் வழி இந்தியப் பெண்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற அவைத் தலைவர்களாகவும், துணையமைச்சர்களாகவும் நாம் கடந்த காலங்களில் நியமித்து அவர்களின் பங்களிப்பை கௌரவித்து வந்திருக்கிறோம்” என்றும் சுட்டிக் காட்டிய விக்னேஸ்வரன், மகளிருக்கு மஇகா அரசியலில் முக்கியத்துவம் வழங்கும் இந்த அணுகுமுறை தனது பதவிக் காலத்திலும் தொடரும் என்று உலக மகளிர் தினத்தில் உறுதி கூறுவதாகத் தெரிவித்தார்.

மலேசிய மகளிர் சமுதாயம், குறிப்பாக இந்திய மகளிர் சமுதாயம் மென்மேலும் உயர்வடைய அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என்றும் விக்னேஸ்வரன் தனது செய்தியில் குறிப்பிட்டார்.