பாகான் டத்தோ – மொகிதின் யாசினைப் பிரதமராகக் கொண்டு அமையவிருக்கும புதிய அரசாங்கத்தில் அமைச்சராக இடம் பெறப் போவதில்லை என அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
அடுத்த துணைப் பிரதமராக நியமிக்கப்படவும் அல்லது உள்துறை அமைச்சராக நியமிக்கப்படவும் நெருக்குதல் அளித்து வருகிறார் என ஆரூடங்கள் நிலவிய நிலையில் சாஹிட் இந்த மறுப்பைத் தெரிவித்திருக்கிறார்.
நேற்று சனிக்கிழமை (மார்ச் 7) பாகான் டத்தோவில் அம்னோ நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது சாஹிட் “புதிய அரசாங்கம் தூய்மையானதாக இருக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் தங்களின் நற்பெயரை நீதிமன்றங்களின் வழி நிலைநாட்டுவதற்கு அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைவர் என்ற முறையில் நான் புதிய அமைச்சரவையில் இணையப் போவதில்லை” எனக் கூறியிருக்கிறார்.
இதை மொகிதினிடம் தெரிவித்து விட்டதாகவும் சாஹிட் தெரிவித்தார்.