Home One Line P1 “‘மலேசியத் தமிழிலக்கியத்தின் வசந்த காலம்’ – சாமிவேலுவின் பதவிக் காலம்

“‘மலேசியத் தமிழிலக்கியத்தின் வசந்த காலம்’ – சாமிவேலுவின் பதவிக் காலம்

473
0
SHARE
Ad

(இன்று மார்ச் 8, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் 84-வது பிறந்த நாள். துன் அவர்களுக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே வேளையில் அவரது, பணிகளை, குறிப்பாக மலேசியாவில் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூரும் வகையில் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது)

ஏறக்குறைய ஒரு தலைமுறைக் காலத்திற்கு தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு கூறாக விளங்கிய துன் ச.சாமிவேலு, அதே காலக்கட்டத்தில் மலேசியத் தமிழ் இலக்கியப் பூங்காவிற்கு வசந்த காலமாகவும் தமிழ் எழுத்தாளர்களின் நலன்களுக்குக் காவலராகவும் விளங்கினார் என்றால் மிகையாகாது.

அவரின் அரசியல் பயணம் விமர்சனத்திற்கு உரியதாகத்தான் இருந்தது. ஆனால், இந்த நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் தமிழ் எழுத்தாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் இடையறாது பாடாற்றியத் தலைவர் அவர் என்றால், அந்த விமர்சனத்திற்கு உறுதியாக மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது.

அந்த நாள் நினைவுகள் – முன்வரிசையில் சாமிவேலு – வளரும் கலைஞர்கள் நாடக மன்றம் (1965) – படம் உதவி: கே.விஜயசிங்கம்
#TamilSchoolmychoice

கல்வி வாய்ப்பு அவருடைய வாழ்க்கையில் அவருக்கு எட்டாக்கனியாக அமைந்து விட்டாலும் காலம் என்னும் நல்லாசிரியரிடம் புடம் பெற்று, மெல்ல அரசியலில் நுழைந்து சொல்லி அடித்து வெற்றியைக் குவித்த வல்லவர் சாமிவேலு.

1970-ஆம் ஆண்டுகளில் நிலவிய தேசிய அரசியல் போக்கை அவதானித்து, தன் நண்பர்களிடம் “நான் ஒரு நாள் அமைச்சராக உயர்வேன்” என்று உறுதிபட சொன்னவர், சொன்னபடியே சாதித்தார். அரசியலில் நுழையும் முன், தனது இளமைக் காலம் கரடு முரடாக வாய்த்ததை எண்ணி சோர்ந்துவிடாமல், ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு படிப்பினைகளைப் பெற்று தன்னை தகவமைத்துக் கொண்டவர் சாமிவேலு.

அதனால்தான் அரசியல் பின்புலமோ, செல்வச் செழுமையோ அல்லது பாரம்பரிய குடும்பப் பின்னணியோ என எதுவும் இன்றி ஒற்றை மனிதராக அரசியலில் சாதிக்க அவரால் முடிந்தது. அத்தகைய சாமிவேலுவிற்கு மார்ச் எட்டாம் நாள் பிறந்த நாள். இந்த நாள், உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் சிறப்பிற்கும் உரிய நாள். சாமிவேலுவிற்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆங்கிலோ-இந்திய கலப்பினத்தில் தோன்றிய பிறவிக் கலைஞருமான சந்திரபாபுவிற்கும் இன்றுதான் நினைவு நாளாகும்.

பால் மரம் சீவிய பெற்றோருக்கு உதவியாளர், சுருட்டு சுற்றுதல், பேருந்து உதவியாளர், அலுவலக உதவியாளர், சமையல்காரர், கட்டிட வரைபடக் கலைஞர், மேடை நாடக நடிகர், வானொலி-தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் என்றெல்லாம் பணி புரிந்து பக்குவம் பெற்றதால்தான், காலந்தவறாமை என்னும் உயர் பண்பு அவரிடம் குடி கொண்டிருந்தது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நாடாளுமன்றத் தொகுதியை ஆக்கிரமித்திருந்த ஆற்றல் அவருக்கு இருந்தது. தேர்தல் காலங்களில் நுட்பமாக களப்பணி ஆற்றும் வல்லமை கொண்டிருந்த சாமிவேலுவின் வாழ்நாளில் ஆண்டுதோறும் மார்ச் எட்டாம் நாள் குதூகலமாகத்தான் இருக்கும். கட்சி வட்டத்திலும் ஏன், அரசாங்க மட்டத்திலும்கூட இந்த நிலை பிரதிபலிக்கும்.

மார்ச் 8-ஆம் நாள் (தற்போது நிறுத்தப்பட்டுவிட்ட) தமிழ் நேசன் நாளேடு விளம்பரங்களால் ததும்பி வழியும்.

இதில் விலக்காக, 2008-ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் நாள், சாமிவேலுவின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தழும்பை ஏற்படுத்திவிட்டது. நாட்டின் பன்னிரண்டாவது பொதுத் தேர்தல் அன்றுதான் நடைபெற்றது. முடிவும் அன்றே வெளியான போது, ஏறக்குறைய 1,821 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி மாலையைத் தவற விட்டார் சாமிவேலு.

இந்திய சமுதாயத்தை நீண்ட காலம் அவர் வழிநடத்திய காலக் கட்டதில், வீட்டுடைமைச் சிக்கல், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புப் பிரச்சினை, இடையறாத ஆலயச் சிக்கல், காவல் தடுப்பு முகாம்களில் இளைஞர்களின் மரணம், மதம் மாற்றப் பிரச்சினை என்றெல்லாம் உணர்ச்சிப் பூர்வமான பிரச்சினைகள் தலைதூக்கி இருந்தன.

இதனால்தான் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின்பால் அந்த நேரத்தில் இந்திய சமுதாயத்திற்கு ஒருவித ஈர்ப்பு நிலவியது.

ஆனால், துன் படாவி தலைமையிலான அன்றைய தேசிய முன்னணி அரசு இதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. சாமிவேலுவும் அப்படித்தான் கருதியிருப்பார் போலும். அந்த காலத்து தகவல் துறை அமைச்சரும் மெர்போக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜைனுடின் மைடின்கூட, “இந்திய வாக்காளர்களின் ஆதரவைக் கொத்தாகக் கவரும் ஆற்றல் மிக்கவர் சாமிவேலு என்பதால், அவர் சுங்கை சிப்புட்டில் நிச்சயம் வெற்றி பெறுவார்” என்று குறிப்பிட்டு அவரும் தன் பங்கிற்கு அப்போது சாமிவேலுவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பொறுப்பு, கட்சித் தலைவர் என பதவிகள் இப்போது இல்லாத காலத்திலும் செல்வாக்குமிக்கத் தலைவராக சாமிவேலு விளங்கி வருகிறார். இந்த ஆற்றல் வேறு எந்தத் தலைவருக்கும் வாய்க்காது. அமைச்சருக்கு ஈடான தெற்காசிய கட்டுமானத் தூதர் பதவியை தேசிய முன்னணி அரசு சாமிவேலுவிற்கு அளித்து சிறப்பித்தது.

சாமிவேலுவின் கனவுத் திட்டமான எம்ஐஇடி கல்வி அற வாரியத்தின் வழி அவர் நிர்மாணித்த ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம், என்றும் அவர் பெயர் சொல்லும் கம்பீரமாக வீற்றிருந்து, ஆயிரக்கணக்கான மாணவர்களை பல்வேறு துறைகளில் உருவாக்கியிருக்கிறது.

மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்கு அளப்பரிய பங்களிப்பு

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் – இந்நாள் தேசியத் தலைவரும்…

அதைப்போல, ஒரு தமிழ் நாளேட்டை நீண்ட காலம் நடத்தி, அதன் வழி நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தார் சாமிவேலு. ஆனாலும், இன்னும் ஒருசில ஆண்டுகளில் நூற்றாண்டை எட்டவிருந்த அந்த நாளேட்டை பொருளாதார சிக்கல்களால் இடையில் நிறுத்தியது ஒரு வரலாற்றுப் பின்னடைவாகும். தமிழ் நேசன் நிறுத்தப்பட்டதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்; இருந்தபோதும், முனைப்பும் அக்கறையும் காட்டி இருந்தால், அந்த பழம்பெரும் நாளேடு இன்று தமிழ் வாசகர்களின் கரங்களில் வலம் வந்து கொண்டிருக்கக்கூடும்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை இரு முறை கோலாலம்பூரில் நடத்தி தமிழன்னைக்கு பெருமை சேர்ந்த சாமிவேலுவை உலக அளவில் தமிழர்கள் பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் பதவி வகித்த காலத்தில்தான் பாரதியார் நூற்றாண்டு விழா 1982-ஆம் ஆண்டில் அப்போதை மஇகா கலாச்சாரப் பிரிவு தலைவர் வழக்கறிஞர் டி.பி.விஜேந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

தமிழகத்திலிருந்து வருகை தந்த எண்ணற்ற எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்கு ஆதரவளிப்பதிலும், அவர்களுக்குரிய மரியாதைகளை வழங்குவதிலும், அவர்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும் சாமிவேலு பெரும் பங்காற்றினார்.

உள்நாட்டு எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது அவரது வழக்கமான நிகழ்ச்சிகளில் ஒன்று. எத்தனையோ உள்நாட்டு எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு அவர் ஆதரவளித்துள்ளார்.

மலாயாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரவை நடத்தும் சிறுகதைப் போட்டிகளுக்கு அவர் தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்திருக்கும் காரணத்தால் இன்று அந்த சிறுகதைத் தொகுப்பு வெளியீடு தொடர்ந்து 32 ஆண்டுகளைக் கடந்து வெளிவந்து, கின்னஸ் சாதனைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் தொடர்பான எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, பலவகைகளிலும் ஆதரவு அளித்த வகையில் அவர் பதவி வகித்த காலம், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கும், மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்கும் வசந்தகாலமாகக் கருதப்படுகிறது.

-நக்கீரன்

Comments