கோலாலம்பூர்: பெர்சாத்து தலைவர் முதலில் ஊழல் நிறைந்த அம்னோ தலைவர்களை அப்புறப்படுத்தினால், பிரதமர் மொகிதின் யாசினுடன் சந்திப்பதை மீண்டும் பரிசீலிப்பதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
“அவர் ஊழலிலிருந்து தடைசெய்யப்பட்ட அம்னோ தலைவர்களை விடுபட்டால், என்னை பார்க்கலாம். எதற்கு என்னை பார்க்க விரும்புகிறார் என்று எனக்குத் தெரியவில்லை.”
“நான் முதலில் அவர் அதை செய்கிறாரா என்று பார்க்க விரும்புகிறேன்,” என்று அவர் மலேசிய இன்சைட் செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார்.
முன்னதாக, பெர்சாத்து உச்சமட்டக் குழு உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான், இரு தலைவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய மொகிதின் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியதாகத் தெரிவித்தார்.
ஊழல் நிறைந்த தலைவர்களுடன் தன்னால் ஒத்துழைக்க முடியாது என்று துன் மகாதீர் மீண்டும் வலியுறுத்துகிறார்.
“நீதிமன்றத்தில் பில்லியன் கணக்கான ரிங்கிட்டுகளை திருடிய குற்றவாளிகளுடன் என்னால் சமரசம் செய்ய முடியாது.”
“அம்னோவை விட்டு வெளியேறும் உறுப்பினர்களை நான் ஏற்றுக் கொள்வேன். அவர்கள் முதலில் அம்னோவை விட்டு வெளியேற வேண்டும்.”
“ஆனால் மொகிதின் யாசின் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார், அதை என்னால் (ஏற்றுக்கொள்ள முடியவில்லை),” என்று அவர் மேலும் கூறினார்.