கோலாலம்பூர்: கொவிட் -19 கொரொனாவைரஸால் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு பிப்ரவரியில் மலேசியாவின் ஒட்டுமொத்த பயணிகளின் எண்ணிக்கை 23.4 விழுக்காடு குறைந்து 6.2 மில்லியன் பயணிகளாக பதிவாகி உள்ளதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) தெரிவித்துள்ளது.
அனைத்துலக மற்றும் உள்நாட்டு விமானப் பயணங்கள் முறையே 2.6 மில்லியன் மற்றும் 3.3 மில்லியன் பயணிகளுடன் 29.6 விழுக்காடு மற்றும் 16.8 விழுக்காடு குறைந்துள்ளது.
கொவிட் -19 பாதிப்பை அடுத்து எதிர்பார்த்தபடி 2020 ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் காணப்பட்ட போக்குவரத்து சரிவு, தொடர்ந்து அதிகரித்துள்ளது.
“மொத்த எம்ஏஎச்பி 8.9 மில்லியன் பயணிகளுடன் 16.7 விழுக்காடு சரிவை பதிவு செய்தது. அனைத்துலக மற்றும் உள்நாட்டு பயணங்கள் முறையே 4.0 மில்லியன் மற்றும் 4.9 மில்லியன் பயணிகளுடன் 21.3 விழுக்காடு மற்றும் 12.5 விழுக்காடு குறைந்துள்ளது.”
“கடைசியாக 12 மாத அடிப்படையில், மொத்த எம்ஏஎச்பி நிறுவனம் 140.2 மில்லியன் பயணிகளுடன் 4.3 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது” என்று அது கூறியது.
பிப்ரவரி 2019-ஆம் ஆண்டை விட ஒட்டுமொத்த விமான இயக்கங்கள் 1.1 விழுக்காடு அதிகரித்துள்ளதாக எம்ஏஎச்பி தெரிவித்துள்ளது. அனைத்துலக விமான இயக்கங்கள் 1.7 விழுக்காடு குறைந்துள்ளன. உள்நாட்டு விமான இயக்கங்கள் பிப்ரவரி 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 3 விழுக்காடு அதிகரித்துள்ளன.