Home அரசியல் “அல்லாஹ்” பிரச்சனைக்கு காரணம் லிம் குவான் எங்”- சுவா சொய் லெக் குற்றச்சாட்டு

“அல்லாஹ்” பிரச்சனைக்கு காரணம் லிம் குவான் எங்”- சுவா சொய் லெக் குற்றச்சாட்டு

799
0
SHARE
Ad

Chua-Soi-Lek-Featureஜனவரி 23 – தற்போது எழுந்திருக்கும் “அல்லாஹ்” என்ற வார்த்தையை மலாய் மொழி பைபிள்களில் பயன்படுத்தும் சர்ச்சைக்கு மூலகாரணம் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்தான் என்றும் அவரது கடுமையான போக்கினால்தான் இந்த சர்ச்சை தற்போது இவ்வளவு பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது என்றும் மலேசிய சீனர் சங்க தலைவர் சுவா சொய் லெக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

பல இன மலேசிய சமுதாயத்தில் தற்போது எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளுக்கு லிம் குவானின் பேச்சுத்தான் விதைபோட்டது என்றும் லிம்மின் அறிக்கையைத் தொடர்ந்துதான் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி மலாய் மொழி பைபிள்களை எரிப்பதாக அச்சுறுத்துகின்றார் என்றும் சுவா கூறினார்.

நேற்று மாலை நடைபெற்ற ம.சீ.சவின் தலைமைத்துவ கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுவா இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் பிரச்சனையானது சுதந்திரம் கிடைத்த காலகட்டத்திலேயே தீர்த்துக் கொள்ளப்பட்ட ஒரு பிரச்சனையாகும். எல்லாவற்றையும் அரசியலாக்குவது போல் எதிர்க்கட்சிகள் இதனையும் அரசியலாக்கியதால் ஏற்பட்டதுதான் இந்த பிரச்சனை” என்றும் சுவா எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்தினார்.

அதேவேளையில் இப்ராகிம் அலியும், முஸ்லிம்கள் மலாய் மொழி பைபிள்களை எரிக்க வேண்டும் என அறிக்கையை விட்டிருக்கக் கூடாது என்றும் நாம் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் மதங்களை மதிக்க வேண்டும் என்றும் சுவா சொய் லெக் கூறினார்.