Home One Line P1 முக்கியமான காலகட்டத்தில் மின்னல் வானொலியில் செய்தி நேரம் பாதியாகக் குறைப்பு

முக்கியமான காலகட்டத்தில் மின்னல் வானொலியில் செய்தி நேரம் பாதியாகக் குறைப்பு

1017
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையின் செய்தி அறிக்கை நேரத்தை தற்பொழுது பாதிக்குப் பாதியாகக் குறைத்து விட்டனர் என பல வானொலி நேயர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மக்கள் தகவல் அறிந்த சமுதாயமாக விளங்க வேண்டும் என்னும் அரசின் கொள்கைக்கு மாறாக இந்த அணுகுமுறை உண்மையில் முரணாகத் தெரிகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதுவும், கொவிட்-19 பாதிப்பால் அதிகமான அதிகாரபூர்வ தகவல்களும், செய்திகளும் மக்களுக்குச் சென்றடைய வேண்டிய இந்த நேரத்தில் செய்திகளின் நேரம் குறைக்கப்படுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் அந்த நேயர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.

2018-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மின்னல் வானொலியின் செய்தி அறிக்கை பின்னடைவைத்தான் சந்தித்து வருகிறது. அதுவும், கொரோனா நச்சுயிரி தாக்கத்தால் நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அரசு அறிவித்து, அதை காவல் துறை-இராணுவப் பிரிவு உதவியுடன் தீவிரமாக நடைமுறைப் படுத்திவரும் இவ்வேளையில், நம்பகமான தகவலுக்கு ஆர்டிஎம் தொலைக்காட்சி அல்லது வானொலியைத்தான நாடவேண்டி உள்ளது.

#TamilSchoolmychoice

இப்படிப்பட்ட நிலையில், செய்தி அறிக்கை நேரத்தைக் கூட்டுவதற்குப் பதிலாக உள்ளதையும் குறைத்து நடவடிக்கை எடுத்திருப்பது சரியா என்ற கேள்வி எழுகின்றது.

மின்னல் வானொலி செய்தி அறிக்கையைப் பொறுத்தவரை காலை 11:00 மணி உலக செய்தி அறிக்கையைக் கேட்டால் போதும்; நம் கண் முன்னால் உலகையே கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள் மின்னல் செய்திப் பிரிவினர்.

அந்த அளவுக்கு செரிவாகவும், சுருக்கமானத் தகவல் பெட்டகமாகவும் இருக்கும் மின்னல் பண்பலையின் உலக செய்தி அறிக்கை. சில சமயங்களில் அதைக் கேட்கத் தவறினால், எதையோ இழந்து விட்டதைப் போலாகிவிடும் எனக்கு.

அதைப்போலத்தான் இரவு 11:00 மணி செய்தித் தொகுப்பும். ஒரு நாள் முழுக்க ஒலிபரப்பான வானொலி செய்திகளைக் கேட்க வாய்ப்பில்லாவிடினும், ஒருவேளை அன்றைய செய்தித்தாளை வாசிக்க முடியாது போனாலும் கவலை இல்லை. அன்றிரவு 11:00 மணி செய்தித் தொகுப்பைக் கேட்டாலே போதும், அன்றைய ஒரு நாள் மலேசிய வாழ்க்கையை படம்பிடித்து நம் மனத்திரையில் காட்டி விடுவார்கள்.

மாமன்னரில் தொடங்கி, அரசாங்கம், சமூகம், தமிழ்ப் பள்ளி, இலக்கியம் வரை அத்தனைத் தகவல்களையும் உள்ளடக்கியிருக்கும் இரவு செய்தித் தொகுப்பு.

மாலை 7:00 மணிக்கு இடம் பெறும் வணிகச் செய்தி அறிக்கை, இன்னும் சிறப்பு; உள்நாட்டு-வெளிநாட்டு பங்கு சந்தை நிலவரம், நாணய மாற்று விவரம், தங்க-வெள்ளி சந்தை நிலவரம், ஈயச் சந்தை நிலவரம், செம்பனைக்கான பன்னாட்டு சந்தை வாய்ப்பு உள்ளிட்ட தகவல்கள் எல்லாம் அடங்கிய வணிக விவகராங்களைக் கொண்டிருக்கும் அந்தச் செய்தி அறிக்கை.

நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சி மாற்றத்திற்குப் பின் இன்னும் செம்மை பெறும் என்று நினைத்ததற்கு மாறாக, தலைகீழ் மாற்றம்தான் ஏற்பட்டது.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் காலை உலக செய்தி அறிக்கையையும் இரவு செய்தித் தொகுப்பையும் பத்திலிருந்து ஐந்து நிமிடங்களாகக் குறைத்தனர். அதைப்போல மாலை வணிகச் செய்தி அறிக்கையையும் பாதியாகச் சுருக்கிவிட்டனர்.

இந்த நிலையில், மொகிதின் யாசின் தலைமையில் மலர்ந்த தேசியக் கூட்டணியின் புதிய ஆட்சியிலாவது மீண்டும் முன்புபோல் செய்திகளின் நேரம் அதிகரிக்கப்படுமா என்று எதிர்பார்த்தால், முந்தைய ஆட்சியின் அதே அணுகுமுறைதான் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கொவிட் – 19 பாதிப்பால் கொரோனா கிருமியால் உலகத்துடன் இந்த மலையகமும் சேர்த்து பாதித்துள்ள இன்றைய நிலையில், மக்களுக்கு அதிகமான, கூடுதலான தகவல்கள் சென்று சேர வேண்டிய தருணத்தில் தமிழ்ச் செய்தி அறிக்கையின் நேரம் குறைக்கப்பட்டிருப்பது முறையல்ல!

உண்மையில் கொவிட்-19 தொடர்பான தகவல்களைப் பரிமாற வானொலி செய்திகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படுவதோடு, சிறப்பு நேரம் ஒதுக்கீடும் செய்யப்படுவதே இந்த காலகட்டத்தில் சரியான அணுகுமுறையாகவும் மக்களுக்குப் பயனாகவும் இருக்கும்.

அரசாங்கத் தொலைக் காட்சி அலைவரிசைகளும், பெர்னாமா தொலைக்காட்சி அலைவரிசையும், தனியார் செய்தித் தொலைக்காட்சிகளும், இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

ஆனால் மின்னல் பண்பலையிலோ இப்பொழுது, பத்து நிமிடங்களுக்கு இடம் பெற்ற சில நேரங்களின் செய்தி அறிக்கைகள் தற்போது பாதியாக நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது.

உலகெங்கும் மக்கள் வீட்டோடு முடங்கி இருக்கின்றனர். மலேசிய இந்தியர்களும், குறிப்பாக தமிழ் வானொலி நேயர்களும் அப்படித்தான். இந்த நேரத்தில்தான் செய்தி அறிக்கைக்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும். அத்துடன், இடையிடையே முக்கியத் தகவலையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மக்களின்பால் பரிவு கொண்ட அரசாங்கத் தகவல் சாதனம் என்றால் அப்படித்தான் செயல்படும்.

ஆனால், நடப்பிலிருக்கும் செய்தி அறிக்கைகளின் நேரத்தையும் குறைப்பதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அண்மைக் காலமாக பகல் 1:00 மணி செய்தி அறிக்கை ஐந்து நிமிடங்களுக்கு இடம்பெற்று வந்த நிலையில், திடீரென்று இன்று வியாழக்கிழமை (மார்ச் 26)  பகல் 1:00 மணி செய்தி அறிக்கை பத்து நிமிடங்களுக்கு இடம்பெற்றது. இது இன்று மட்டும்தானா அல்லது தொடருமா என்பதும் தெரியவில்லை.

இன்று புதன்கிழமை இரவு 9.00 மணிக்கு ஒலிபரப்பான செய்தியும் 5 நிமிடங்களுக்கு மட்டுமே ஒலிபரப்பப்பட்டது.

ஆர்டிஎம் அதிகாரிகளும், மின்னல் பண்பலை நிர்வாகமும் இதற்கு முறையான விளக்கம் தருவார்களா?

-நக்கீரன்