இலண்டன் – கொவிட்-19 பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் உடல்நிலை நேற்று திங்கட்கிழமை மோசமடைந்ததைத் தொடர்ந்து தற்போது தீவிர கவனிப்பு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இலண்டனில் உள்ள செயிண்ட் தோமஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமரின் பணிகள் தடையின்றித் தொடர துணைப் பிரதமராக, வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் நியமிக்கப்பட்டிருக்கிறார். பிரிட்டனின் பிரதமர் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை டொமினிக் ராப் மேற்கொள்வார்.
ஞாயிற்றுக்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜோன்சன் அதன்பிறகு வெளியிட்ட காணொளி ஒன்றில் (வீடியோ) தான் நலமாக இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து கொண்டே பிரதமருக்குரிய பணிகளை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதற்குப் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் அவர் தீவிர கவனிப்பு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பது பிரிட்டன் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதோடு, கொவிட்-19 தாக்கத்தின் தீவிரத்தையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.